மும்பை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை - ஆர்சிபி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி பேட்டிங்கின் போது 17.2-வது ஓவரில் பந்து மாற்றப்பட்டது. அப்போது அந்த அணியின் பேட்ஸ்மேன் டிம் டேவிட் பந்தை கையில் வாங்கிக் கொண்டு திருப்பி கொடுக்க மறுத்தார்.
19.2-வது ஓவரிலும் இதே போன்று அவர், நடந்துகொண்டார். இது ஐபிஎல் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது ஆகும். இந்நிலையில் இந்த விவகாரத்தில் டிம் டேவிட்டுக்கு போட்டியின் ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மதிப்பிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்டத்தில் மும்பை அணி பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.