மும்பை: பவுன்சர்களை வீசுவதற்கு முன்னரே திட்டமிடுவதில்லை என்றும், பேட்ஸ்மேன்களை விட ஒரு படி முன்னால் இருக்க தனது உள்ளுணர்வுக்கு ஏற்ப அந்தப் பந்துகளைப் பயன்படுத்துவதாக ஆர்சிபி அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கிருணல் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி. இந்த ஆட்டத்தில் 241 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணியானது 5 விக்கெட்கள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
ஆர்சிபி அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் மும்பை அணிக்கு இது 3-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
ஆர்சிபி அணியின் பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கிருணல் பாண்டியா 4 ஓவர்களை வீசி 26 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். நடப்பு தொடரில் கிருணல் பாண்டியா பவுன்ஸர்களை வீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் ஆர்சிபி அணியின் ஆல்ரவுண்டரான கிருணல் பாண்டியா கூறியதாவது:
புதிய மற்றும் வித்தியாசமான விஷயங்களை முயற்சி செய்ய நான் ஒருபோதும் தயங்கியதில்லை. இதற்கு முன்னர் 6 அல்லது 7-வது வரிசைகளில் ஆல்-ரவுண்டர்கள் களமிறங்குவார்கள். அப்போது பேட்டிங் அணுகுமுறை முற்றிலும் வேறாக இருந்தது. இப்போது, 8-வது வரிசையில் முழுமையான பேட்ஸ்மேன்கள் களமிறங்கும் சூழல் உருவாகியுள்ளது.
அதோடு வீரர்களின் திறமையும் அதிகரித்துள்ளது. முகுல் சவுத்ரி, வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் வீரர்கள் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடுகிறார்கள். இதனால் ஒரு பந்துவீச்சாளராக, எனது திறமையிலும் மனதளவிலும் அவர்களை விட ஒரு படி முன்னால் இருக்க நான் விரும்புகிறேன்.
எனது பந்துவீச்சு சிறப்பாக அமைவதில் மகிழ்ச்சி. தட்டையான ஆடுகளங்கள் மற்றும் 8 பேட்ஸ்மேன்கள் இருக்கும் டி20 ஆட்ட முறையில், சுழற்பந்து வீச்சாளர்கள் தப்பிப்பிழைத்து, சவால்களைக் கடந்து சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில், இத்தகைய சூழலில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக செயல்படுவது மிகவும் கடினமாகிவிட்டது.
நான் எனது உள்ளுணர்வை பின்பற்றுபவன். நான்காவது, ஐந்தாவது அல்லது ஆறாவது பந்தை பவுன்சராக வீச வேண்டும் என்று நான் முன்கூட்டியே திட்டமிடுவதில்லை. சில முறை நான் அடுத்தடுத்து இரண்டு பவுன்சர்களை வீசுவேன். திடீரென ஓவரின் முதல் பந்தையும் ஆறாவது பந்தையும் பவுன்சராக வீசுவேன்.
எந்தப் பந்தை எப்பொழுது வீச வேண்டும் என்பது பெரும்பாலும் எனது உள்ளுணர்வைப் பொறுத்தது, நான் எடுக்கும் முடிவில் நூறு சதவீதம் உறுதியாக இருந்து செயல்படுவேன். ரசிகர்கள் என்னுடைய பவுன்சர்களைப் பற்றியும், எனது பந்துவீச்சு முறைகளைப் பற்றியும் அதிகமாகப் பேசுகிறார்கள்.
நான் எப்போதும் எனது பந்துவீச்சின் அடிப்படை அம்சங்களிலேயே கவனம் செலுத்தி வருகிறேன். நான் உயரமாக இருப்பதால் என்னால் பந்தை நன்றாக பவுன்ஸ் செய்ய முடிகிறது. அதேபோல், பந்தைச் சுழற்றியும், காற்றில் அதன் வேகத்தை மாற்றியும் பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்ய முடிகிறது. இவ்வாறு கிருணல் பாண்டியா கூறினார்.