லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரரும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் மான்டி பனேசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மான்டி பனேசர். இவர் இங்கிலாந்து அணிக்காக 2006-ம் ஆண்டு முதல் 2013-ம் வரை விளையாடியுள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் இன்று தொடங்க உள்ளது.
ஆஷஸ் தொடரில் மோசமாக செயல்பட்டு வருவதால் இங்கிலாந்து அணிக்கெதிராக கண்டனக் கணைகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. அணியின் பயிற்சியாளராக இருக்கும் பிரண்டன் மெக்கல்லத்தை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை, இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர் பனேசர் பரிந்துரை செய்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாடு கவலை அளிக்கிறது. எனவே, பயிற்சியாளரை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஆஸ்திரேலிய அணியின் பலவீனத்தை தெரிந்து வைத்துள்ள ஒருவர் அடுத்த பயிற்சியாளராக வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எப்படி என்பதை அறிந்த ஒருவர் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பலவீனம் மற்றும் அதன் யுக்தியை எப்படி சாதகமாக பயன்படுத்திக் கொள்வது என அறிந்த பயிற்சியாளர் நமக்கு தேவை. ரவி சாஸ்திரி இங்கிலாந்தின் அடுத்த தலைமை பயிற்சியாளராக வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017, 2021-ம் ஆண்டுகளில் ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளாராக இருந்த போது இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடர்களை வென்றது குறிப்பிடத்தக்கது.