ஹூப்ளி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கர்நாடகா - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இன்று மோதுகின்றன. 5 நாட்கள் கொண்ட இந்த ஆட்டம் கர்நாடகாவின் ஹூப்ளியில் உள்ள கேஎஸ்சிஏ மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
பராஸ் டோக்ரா தலைமையிலான ஜம்மு & காஷ்மீர் அணி முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. அதேவேளையில் கர்நாடகா அணி 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. அந்த அணியின் பேட்டிங்கில் கே.எல்.ராகுல், கருண் நாயர், கேப்டன் தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் சமரன் ஆகியோர் வலுசேர்க்கக்கூடியவர்கள்.
கே.எல்.ராகுல் 3 ஆட்டங்களில் 457 ரன்களையும், கருண் நாயர் 8 ஆட்டங்களில் 699 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 5 ஆட்டங்களில் 532 ரன்களையும், ரவிச்சந்திரன் சமரன் 8 ஆட்டங்களில் 950 ரன்களையும் குவித்துள்ளனர். இவர்கள், ஜம்மு & காஷ்மீர் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால்தரக்கூடும்.
எனினும் இந்த வலுவான பேட்டிங் வரிசைக்கு வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபி தலைமையிலான ஜம்மு & காஷ்மீர் பந்துவீச்சுத்துறை பதிலடி கொடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த அணி அரை இறுதியில் பலம் வாய்ந்த பெங்கால் அணியை வீழ்த்தியிருந்தது. அகிப் நபி நடப்பு சீசனில் 55 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
கர்நாடக அணியின் பந்துவீச்சும் பலம் வாய்ந்ததாகவே திகழ்கிறது. பிரசித் கிருஷ்ணா, வித்வத் கவேரப்பா, வித்யாதர் பாட்டீல், வைஷாக் விஜயகுமார், ஷிகார் ஷெட், மோஷின் கான், ஸ்ரேயஸ் கோபால் ஆகியோர் ஜம்மு & காஷ்மீர் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
ஆல்ரவுண்டரான சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயஸ் கோபால் நடப்பு தொடரில் 46 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். மேலும் பேட்டிங்கில் 442 ரன்களையும் சேர்த்துள்ளார். இதனால் அவரிடம் இருந்து மீண்டும் ஒருமுறை மேம்பட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும்.