சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு - ரயில்வேஸ் அணிகள் இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் ரயில்வேஸ் 184 ரன்களும், தமிழக அணி 165 ரன்களும் எடுத்தன.
19 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ரயில்வேஸ் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 51 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஹாப் யுவராஜ் சிங் 42, ரவி சிங் 19, தவுஃபிக் உத்தின் மொண்டல் 11, ஜூபைர் அலி 10 ரன்கள் சேர்த்தனர்.
ரத்யும்ன் பரிக் 2, ஹிமான்ஷு சங்க்வான் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ரயில்வேஸ் அணி 52.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தமிழக அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 4, ஜெகநாதன் ஹெம்சுதேஷன் 3, அஜித் ராம் 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து 128 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தமிழக அணி 59.1 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆந்த்ரே சித்தார்த் 128 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். விமல் குமார் 10, ஆதிஷ் 21, நாராயண் ஜெகதீசன் 12, சோனு யாதவ் 2, பாபா இந்திரஜித் 23 ரன்களில் நடையை கட்டினர். ஆட்ட நாயகனாக சாய் கிஷோர் தேர்வானார். அவர், இரு இன்னங்ஸிலும் கூட்டாக 7 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு 6 புள்ளிகள் முழுமையாக கிடைத்தன.
‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள தமிழக அணி முதல் ஆட்டத்தை ராஜஸ்தான் அணிக்கு எதிராக டிரா செய்திருந்தது. 2-வது ஆட்டத்தில் உத்தராகண்ட் அணியை இன்னிங்ஸ் மற்றும் 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.