ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி
முலான்பூர்: எங்கள் கவனம் ஐபிஎல் கோப்பை மீது உள்ளது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். இந்த ஆட்டத்தில் 29 பந்துகளில் 97 ரன்களை அவர் எடுத்திருந்தார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்களில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதன் மூலம் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் விளையாடுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங்கும், ஜோப்ரா ஆர்ச்சரின் பவுலிங்கும். இதில் அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் கூறியது:
“நாங்கள் வெற்றி பெறும் போது அதன் பாசிட்டிவ் உத்வேகத்தை அப்படியே அடுத்த ஆட்டத்துக்கு முன்னெடுத்து செல்வோம். இதே பாணியில் அடுத்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறுவோம். அடுத்த ஆட்டம் குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை. நான் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். எனது ஆட்டம் சார்ந்து ஏதேனும் மேம்பாடு செய்ய வேண்டுமென்று கருதினால் அதில் கவனம் செலுத்துவேன்.
ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பும் எதிரணியில் உள்ள பந்து வீச்சாளர்கள் யார்? அவர்களை நான் எப்படி அணுகுவது? விக்கெட் எப்படி உள்ளது? பவுண்டரி லைனின் துறை உள்ளிட்டவற்றை கவனிப்பேன். எனது உத்வேகத்தை பாசிட்டிவாக வைப்பேன்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ரன் குவிப்பதில் எனது கவனம் இருந்தது. ஆட்டமிழந்த பிறகே அதிவேக ஐபிஎல் சாதனை சதத்தை விளாசும் வாய்ப்பை மிஸ் செய்தது குறித்து அறிந்தேன். என்னால் முடிந்த அளவுக்கு அணிக்கு உதவ விரும்புகிறேன். சதம் என்பது வந்து கொண்டு தான் இருக்கும். இப்போது எங்கள் கவனம் ஐபிஎல் கோப்பை மீது உள்ளது” என அவர் தெரிவித்தார்.