துஷார் தேஷ்பாண்டே

 
விளையாட்டு

துல்லிய யார்க்கர்கள் வீசி எதிரணிக்கு இம்சை கொடுத்த துஷார் தேஷ்பாண்டே: IPL 2026

வேட்டையன்

அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட துல்லிய யார்க்கர்கள் வீசி வெற்றியை ராஜஸ்தான் ராயல்ஸ் வசமாக்கினார் துஷார் தேஷ்பாண்டே.

நடப்பு ஐபிஎல் சீசனில் 9-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில் ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்து 210 ரன்கள் சேர்த்தது. துருவ் ஜுரெல், ஜெய்ஸ்வால் ஆகியோரின் அரைசதம் அதற்கு உதவியது. 211 ரன்களை கேப்டன் ஷுப்மன் கில் இல்லாமல் இலக்கை விரட்டியது.

          

அந்த அணி 14.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் குஜராத் அணியின் வெற்றிக்கு 51 ரன்கள் தேவைப்பட்டது. ரஷீத் கான் மற்றும் ரபாடா இணைந்து 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கடைசி ஓவரில் குஜராத் அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.

யார்க்கர் வீசிய துஷார் தேஷ்பாண்டே: கடைசி ஓவரை ராஜஸ்தான் அணிக்காக துஷார் தேஷ்பாண்டே வீசினார். அந்த ஓவரில் யார்க்கர்களாக வீசி களத்தில் இருந்து எதிரணி பேட்ஸ்மேன்களை அவர் திணறச் செய்தார். கூடவே ரஷீத் விக்கெட்டையும் கைப்பற்றினார். கடைசிப் பந்தில் குஜராத் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட அந்தப் பந்தை டாட் பாலாக துஷார் வீசினார். ராஜஸ்தான் அணியில் கடைசி ஓவர்களில் சிற்பபாக பந்து வீசும் சந்தீப் சர்மா இருந்தபோதும் துஷாரை தேர்வு செய்தார் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக். அவரும் கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றினார்.

30 வயதான துஷார் தேஷ்பாண்டே, சிஎஸ்கே, டெல்லி அணிகளுக்காக இதற்கு முன்பு விளையாடி உள்ளார். இப்போது ராஜஸ்தான் அணியில் விளையாடி வருகிறார். 47 ஆட்டங்களில் விளையாடி 52 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

2020 சீசனில் டெல்லி அணிக்காக விளையாடினார். அதன் பின்னர் 2022 சீசன் முதல் 2024 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 2023 சீசனில் 16 ஆட்டங்களில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்த சீசனில் சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின்னர் 2025 சீசனில் ரூ.6.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. அதனால் கடந்த சீசன் முதல் அந்த அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.

SCROLL FOR NEXT