சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 4-வது பதிப்பு வேளச்சேரியில் நடைபெற்றது. இதன் கடைசி மற்றும் 7-வது சுற்று நேற்று நடைபெற்றது.
உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹான்ஸ் நீமனுடன் மோதினார். இந்த ஆட்டம் 19-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான நிஹால் சரின், எம்.பிரனேஷுடன் மோதினார். இந்த ஆட்டம் 48-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.
3.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்த உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டரான நோதிர்பெக் அப்துசத்தோரோவ், ரஷ்யாவின் டிமிட்ரி ஆண்ட்ரெய்கினை எதிர்கொண்டார். இதில் வெற்றி பெறும் நோக்கில் விளையாடிய வி நோதிர்பெக் அப்துசத்தோரோவ் 37-வது நகர்தலின் போது தோல்வி அடைந்தார்.
6 சுற்றுகள் வரை 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரோஜா, 3.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகையுடன் மோதினார். அலிரேசா ஃபிரோஜா வெள்ளை காய்களுடனும், அர்ஜூன் எரிகைசி கருப்பு காய்களுடனும் களமிறங்கினர்.
இந்த மோதல் 41-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் 4.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அலிரேசா ஃபிரோஜா சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்தத் தொடரில் அலிரேசா ஃபிரோஜா தொடர்ச்சியாக 2 வெற்றிகளையும், அதன் பின்னர் 5 டிராவையும் பதிவு செய்திருந்தார்.
அலிரேசா ஃபிரோஜாவை தவிர்த்து, இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே வீரரான டிமிட்ரி ஆண்ட்ரெய்கின், அர்ஜூன் எரிகைசியுடன் இணைந்து 4 புள்ளிகளுடன் போட்டியை நிறைவு செய்தார். அப்துசத்தோரோவ், நிஹால் சரின், எம்.பிரனேஷ் ஆகியோர் தலா 3.5 புள்ளிகளுடன் முறையே 4, 5 மற்றும் 6-வது இடத்தை பிடித்தனர். அமெரிக்காவின் ஹான்ஸ் நீமன் 3 புள்ளிகளுடன் 7-வது இடம் பிடித்தார். உலகச் சாம்பியனான குகேஷின் சரிவு தொடர்ந்தது. அவர் தனது ஏழு போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்து, 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்தார்.