பெங்களூரு: இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறவிருந்த ‘ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்’ தொடரில் பங்கேற்பதற்காக இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து துபாய் வழியாக பயணம் மேற்கொண்டார். அப்போது ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக துபாய் வான் எல்லை மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் பி.வி.சிந்து துபாய் விமான நிலையத்தில் பல மணிநேரம் சிக்கித் தவித்தார். தான் தங்கியிருந்த இடத்துக்கு அருகிலேயே குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், தனது பயிற்சியாளர் அங்கிருந்து தப்பி ஓட வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் பி.வி.சிந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
விமான பயணம் மேற்கொள்ள முடியாததால் பர்மிங்காமில் நேற்று தொடங்கிய பாட்மிண்டன் தொடரில் இருந்து பி.வி.சிந்து விலகினார். இந்நிலையில் நேற்று துபாயில் இருந்து பி.வி.சிந்து பாதுகாப்பாக பெங்களூரு வந்து சேர்ந்தார்.
இதுதொடர்பாக அவர், தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பெங்களூருவில் உள்ள வீட்டுக்கு திரும்பிவிட்டேன். பாதுகாப்பாக உள்ளேன். கடந்த சில நாட்கள் மிகவும் கடினமும், குழப்பமும் நிறைந்ததாக இருந்தன, ஆனால் என் வீட்டுக்கு திரும்பியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மிகவும் கடினமான நேரத்தில் எங்களை நன்றாக கவனித்துக் கொண்ட துபாய் அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள், குடியேற்ற அதிகாரிகள் என ஒவ்வொரு நபருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர்களின் இரக்கம் மற்றும் தொழில்முறை மனப்பாங்கு ஆகியவை வார்த்தைகளால் சொல்ல முடியாததை விட அதிகம். இப்போது ஓய்வெடுத்து அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.