ஐபிஎல் 2026 தொடரின் ஆரம்பக்கட்டங்களில் வெற்றியின் பாதையில் சென்று கொண்டிருந்த ஸ்ரேயஸ் அய்யர் தலைமை பஞ்சாப் கிங்ஸ் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தோல்வி அடைந்து தன் 3வது தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது. அணியின் பீல்டிங் தொடர்ந்து சரிவடைந்து வருவதே இதற்குக் காரணம்.
கேட்ச் விடுதல் என்பது தொற்று நோய் போல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் பரவியுள்ளது. ஷஷாங்க் சிங் தொடர்ந்து முக்கியமான கேட்ச்களைத் தவறவிட்டு வருகிறார். நேற்று லாக்கி பெர்கூசன், கூப்பர் கனோலி ஆகியோரும் கேட்ச்களை விட்டனர். இவையெல்லாம் ஏதோ கடினமான கேட்ச்கள் அல்ல. எளிதான கேட்ச்கள் என்பதுதான் ஐபிஎல் கிரிக்கெட்டின் தரம் கேள்விக்குள்ளாகிறது.
ஏலத்தில் ஹிட்டர் என்றும் ஸ்பின் போடுகிறாரா, வேகம் போடுகிறாரா என்று மட்டுமே பார்த்து எடுப்பதில் பீல்டிங் என்ற அளவுகோலே மறைந்து வருகிறது. கேட்ச்களை விட்டதால்தான் சன் ரைசர்ஸ் 235 ரன்கள் எடுக்க முடிந்தது. இதை கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் மிகத்துல்லியமாக அவதானித்துள்ளார், “அந்தக் கேட்ச்களை எடுத்திருந்தால் பஞ்சாப் கிங்ஸ் 30-40 ரன்கள் குறைவான இலக்கையே துரத்தியிருக்கும் வென்றிருக்கும்” என்றார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்பின் பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலேவும் விடப்பட்ட கேட்ச்களே தோல்விக்குக்காரணம் என்று கூறியுள்ளார். இஷான் கிஷனுக்கும் ஹென்ரிச் கிளாசனுக்கும் கேட்ச்களை விட்டால் நிச்சயம் அவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விளாசவே செய்வார்கள். கேட்ச்களை எடுத்தால் புதிய வீரர் கிரீசில் வருவார் பவுலிங் அணி மேலும் டைட் ஆக்க முடியும்.
8வது ஓவரில் இஷான் கிஷன், பெர்கூசன் பந்தை ஸ்கொயர் லெக்கில் தூக்கி அடிக்க அங்கு ஆஸ்திரேலிய வீரர் கூப்பர் கனோலி பந்தை நன்றாகக் கணித்தார் ஆனால் கையைக் கொண்டு சென்ற போது தவற விட்டார். அடுத்த ஓவரிலேயே ஹென்ரிஸ் கிளாசன், செஹல் பந்தை தூக்கி லாங் லெக்கில் அடிக்க அது மிக மிக எளிதான கேட்ச் ஆகச் சென்றது ஆனால் ஷஷாங்க் சிங் நழுவ விட்டார்.
அதே போல் 11வது ஓவரில் பெர்கூசன் ஒரு கேட்சை விட்டார். அதே ஓவரில் பிரப்சிம்ரன் சிங் ஸ்டம்பிங் வாய்ப்பைக் கோட்டை விட்டார். இஷான் கிஷன் முதல் முறை ட்ராப் செய்யப்படும் போது 9 ரன்களிலும் 2வது முறை டிராப் செய்யப்படும் போது 18 ரன்களிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிளாசனுக்கு கேட்ச் விடும்போது அவரும் 9 ரன்களில் இருந்தார். இவர் 49 பந்துகளில் 63 ரன்கள் எடுக்க, இஷான் கிஷன் 32 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அதாவது கேட்ச் நம்மிடம் வந்து விடக்கூடாது என்ற மனநிலையே இதற்குக் காரணம், அப்படிப்பட்ட மனநிலையில் கேட்ச் வரும்போது ‘அய்யய்யோ நம்ம கிட்டயே அடிக்கிறாங்களே’ என்று நினைத்தால் அவ்வளவுதான் கேட்ச் ட்ராப்தான் ஆகும். எதிரணியினரும் இதிலிருந்து மீண்டெழுந்து விடுவார்கள். catches wins not only matches, it also wins our minds.