புஜாரா, ரஹானே

 
விளையாட்டு

ஈகோ இல்லாத ‘கூல்’ லீடர் ரஹானே: புஜாரா புகழாரம்

ஆர்.முத்துக்குமார்

‘அஜ்ஜு’ என்று இந்திய அணியில் செல்லமாக சக வீரர்களால் அழைக்கப்படும் அஜிங்கிய ரஹானே தனது அற்புதமான கிரிக்கெட் கரியரை முடித்துக் கொண்டு ஓய்வு அறிவித்து விட்டார்.

உண்மையிலேயே கிரேட் என்று சொல்வதற்கு அருகில் சென்று வந்தவர் ரஹானே. கோலி, பும்ரா, ஷமி, அஸ்வின் இல்லாத ஒரு அணியை அதுவும் ஆஸ்திரேலியாவில் 36 ஆல் அவுட்டுக்கு பிறகு வழிநடத்தி தொடரை வெல்வது என்றால் அது வெறும் அசாதாரணமானது மட்டுமல்ல, நினைத்துப் பார்க்கவே முடியாத சாதனையாகும்.

இந்நிலையில், அவருடன் ஆடிய சக வீரரான புஜாரா, ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தளத்தில் எழுதிய பத்தியில் ரஹானேவை புகழ்ந்து பேசியுள்ளார்:

“அஜிங்க்ய ரஹானேவின் கேப்டன்சி திறமையின் மிகப்பெரிய பலம் என்னவென்றால் அணியில் உள்ள அனைத்தையும் மிகவும் எளிமையாக கையாள்வதில்தான் இருந்தது. அணியில் யார் சிறந்த வீரர் என்ற அகந்தை அவரிடம் ஒருபோதும் இல்லை. ஒவ்வொரு வீரரிடமிருந்தும் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர்வதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் முக்கியமானவர்கள் என்ற நம்பிக்கையுடன், அனைவருக்கும் நம்பிக்கையையும் மனநிம்மதியையும் அளித்தார். அதே நேரத்தில், ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பில் அவர் எந்த சமரசமும் செய்யவில்லை. அந்த விஷயத்தில் அவர் ஒரு சிறந்த தலைவராகத் திகழ்ந்தார்.

ரஹானே எப்போதும் தனது செயல்பாடுகள் மூலமே வழிநடத்த விரும்பினார். அதே சமயம், ஒவ்வொரு வீரரின் கருத்துக்கும் மதிப்பளித்து, அவர்கள் இயல்பாக விளையாடும் சூழலை உருவாக்கினார். அணி சிறப்பாக செயல்பட்டு வந்ததால் தேவையற்ற மாற்றங்களை செய்ய முயற்சிக்கவில்லை. சில நேரங்களில் அதிகமாக பேசுவதைவிட அமைதியாக இருப்பதே அணிக்கு நல்லது என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார்.

எப்போது தலையிட வேண்டும், எப்போது வீரர்களை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என்பதையும் அவர் சரியாக புரிந்துகொண்டிருந்தார். அதே நேரத்தில், தேவையான இடத்தில் உறுதியுடன் முடிவெடுக்கவும் அவர் தயங்கியதில்லை. தலைவராக இருந்தாலும், வீரராக இருந்தாலும், களத்தில் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அவரிடம் எப்போதும் இருந்தது.

மைதானத்துக்கு வெளியே அவர் எப்படி அமைதியாகவும் எளிமையாகவும் பேசும் மனிதராக இருந்தாரோ, அதே குணாதிசயங்களே அவரது ஆட்டத்திலும் வெளிப்பட்டன. களத்திலும் அவர் மிகவும் அமைதியானவர். அதிக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியதில்லை. ஆனால், அவரது ஆக்ரோஷம் முழுவதும் பேட்டிங்கில்தான் தெரிந்தது.

ஜூனியர் கிரிக்கெட் காலத்திலேயே ரஹானேவின் அதிரடியான பேட்டிங்கைப் பார்த்தபோது, குறைந்த ஓவர் கிரிக்கெட்டுக்காகவே பிறந்த இயற்கையான திறமையாளராக அவர் தோன்றினார். பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டின் நீண்ட வடிவம் அவருக்கு பொருந்தாது என்று நினைத்தனர். ஆனால், அப்போது அவர் விளையாடிய விதத்தை பார்த்தபோது, ரிஷப் பந்த் அல்லது டேவிட் வார்னர் போன்ற அதிரடி டெஸ்ட் பேட்ஸ்மேன்களைப் போல பந்துவீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்தக்கூடிய வீரர் என்றே தோன்றியது.

பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து வெற்றி பெறுவதற்காக தனது ஆட்ட முறையை மாற்றி, மேலும் நிலைத்தன்மையுடன் விளையாடத் தொடங்கினார்.

மிட்-ஆன், மிட்-ஆஃப் மற்றும் கவர் பகுதிகளுக்கு மேல் பந்தை தூக்கி அடிக்கும் ஷாட்கள் அவருக்கு மிகவும் இயல்பாக வந்தன. ரஹானேவுடன் இணைந்து பேட்டிங் செய்வது எப்போதும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எங்களுக்குள் சிறந்த புரிதல் இருந்தது. அணி நெருக்கடியில் சிக்கியபோதெல்லாம், கூட்டணியை உருவாக்கி போட்டியின் போக்கை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருவருக்கும் இருந்தது.

அதற்கான மிகச்சிறந்த உதாரணம் 2017-ஆம் ஆண்டு பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டிதான். அதற்கு முன் புனேவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா மோசமாக தோல்வியடைந்திருந்தது.

பெங்களூரு டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியா ஒரு கட்டத்தில் கடுமையான நெருக்கடியில் இருந்தது. அந்த நேரத்தில் ஆஸ்திரேலியா வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது போலவே கொண்டாடும் மனநிலையில் இருந்தது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் இணைந்து 118 ரன்கள் சேர்த்த கூட்டணி, அந்த தொடரின் திருப்புமுனையாக அமைந்தது. மூன்றாவது நாள் தேநீர் இடைவேளைக்குச் செல்லும்போது, ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்ததால் நான் சற்று ஆவேசமடைந்து அவர்களிடம் பதில் பேச ஆரம்பித்தேன்.

அப்போது ரஹானே என்னிடம், "அவர்களின் பேச்சால் பாதிக்கப்படாதே. நம் கூட்டணியில் மட்டும் கவனம் செலுத்துவோம். நம் பேட்டுகள்தான் பேச வேண்டும்," என்று அமைதியாக கூறினார். இறுதியில் அவர் சொன்னதுபோலவே நடந்தது. எங்கள் பேட்டிங்கே ஆஸ்திரேலியாவுக்கு சிறந்த பதிலாக அமைந்து, இந்தியாவின் தொடரை மாற்றிய வெற்றிக்கு அடித்தளமிட்டது.” என்று புஜாரா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT