இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

 
விளையாட்டு

கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று பிரக்ஞானந்தா சாதனை

செய்திப்பிரிவு

செயின்ட் லூயிஸ்: கிராண்ட் செஸ் டூரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் கிளப்பில் கிராண்ட் செஸ் டூரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான பேபியானோ கருனாவுடன் மோதினார். கிளாசிக்கல் போட்டியில் பிரக்ஞானந்தா முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தை பிரக்ஞானந்தா டிரா செய்தார். இதனால் அவர், 3-9 என பின்தங்கிய நிலையில் இருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ரேப்பிடு மற்றும் பிளிட்ஸ் பிரிவில் பிரக்ஞானந்தா பதிலடி கொடுத்தார். 2 ரேப்பிடு ஆட்டங்களில் பேபியானோ கருனாவை, பிரக்ஞானந்தா தோற்கடித்தார். இதனால் பிரக்ஞானந்தா 11-9 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

இதையடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட பிளிட்ஸ் போட்டி நடைபெற்றது. இதில் முதல் ஆட்டம் டிரா ஆனது. 2-வது ஆட்டத்தில் பேபியானோ கருனா வெற்றி பெற்றார். இதனால் ஆட்டம் 12-12 என சமநிலையை எட்டியது. 3-வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று பதிலடி கொடுத்தார்.

இதனால் அவர், 14-12 என்ற முன்னிலையை நோக்கி நகர்ந்தார். பரபரப்பான கடைசி ஆட்டம் டிரா ஆனது. இதனால் பிரக்ஞானந்தா 15-13 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.

சாம்பியன் பட்டம் வென்ற சென்னையை சேர்ந்த 21 வயதாகும் பிரக்ஞானந்தாவுக்கு சுமார் ரூ.1.90 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அமெரிக்காவின் வெஸ்ஸி சோ 18-12 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தினார்.

கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டியில் பட்டம் வென்றதன் மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கிராண்ட் செஸ் டூர் போட்டியில் பிரக்ஞானந்தா தன் இடத்தை உறுதிசெய்துள்ளார். அவருடன் பேபியானோ கருனா, வெஸ்லி சோ, வின்சென்ட் கீமர் ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற பிறகு பிரக்ஞானந்தா கூறும்போது, “உண்மையைச் சொன்னால், எனக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, பேபியானோ கருனாவிடம் இருந்து ஒரு வெற்றியை பெறுவதே கடினம். ஆனால் ரேப்பிடு சுற்றில் 2 வெற்றிகளை பெற்றது முக்கியமானதாக அமைந்தது” என்றார்.கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா.

SCROLL FOR NEXT