கராச்சி: டி20 உலகக் கோப்பையில் மோசமான செயல்பாட்டால் பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
லீக் சுற்றில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் வீழ்ந்திருந்தது. மேலும் அந்த அணி நியூஸிலாந்துடன் மோத இருந்த ஆட்டம் மழை காரணமாக ரத்தாகியிருந்தது. இதனால் நிகர ரன் ரேட் விகிதத்தில் சிக்கிய பாகிஸ்தான் அணி கடைசி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்திய போதிலும் தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில் இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி வீரர்களின் செயல் திறன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் கேள்விகணைகளை தொடுத்து வருகின்றனர்.
வீரர்களின் செயல்திறன் வாரியத்தை மட்டுமல்ல, அரசாங்கத்தில் உள்ள செல்வாக்கு மிக்க நபர்களையும் வருத்தப்படுத்தியுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் விளையாடிய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.16.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.