விளையாட்டு

அபார பந்துவீச்சு மூலம் மீண்டும் இந்திய அணியின் கதவை உடைக்கும் முனைப்பில் ஷமி!

ஆர்.முத்துக்குமார்

கிரிக்கெட் அல்லாத பிற காரணத்தால் இந்திய அணியில் மீண்டும் தேர்வு செய்யப்படாமல் உட்கார வைக்கப்பட்டிருக்கும் முகமது ஷமி, டெல்லி அணிக்கு எதிராக பெங்கால் அணிக்காக 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னை மீண்டும் மீண்டும் உடல் தகுதியுடைவர் என்றும், பந்துவீச்சுத் திறமைகள் மங்கவில்லை என்றும் நிரூபித்தாலும் புவனேஷ்வர் குமாருக்குக் கிடைக்கும் செலக்‌ஷன் லாபி இவருக்குக் கிடைக்கவில்லை என்பது நிச்சயம் வேதனையானதே.

36 வயதிலும் தனது திறமையாலும் கடின உழைப்பாலும் தனக்கான மதிப்பை நிரூபித்து வருகிறார் முகமது ஷமி. பெங்களூரில் உள்ள பெங்கால் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டெல்லிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் பெங்கால் அணிக்காக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சீசனை சிறப்பாகத் தொடங்கிய ஷமி, தனது பந்துவீச்சில் உள்ள இயல்பான திறமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

இது குறித்து ஷமி கூறுகையில், “பந்தை எப்போது உள்ளே ஸ்விங் செய்ய வேண்டும், எப்போது வெளியே ஸ்விங் செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்படும் புத்திசாலித்தனம் பவுலருக்கு இருக்க வேண்டும். எனது செயல்பாட்டில் எந்த மாற்றத்தையும் நான் உணரவில்லை. எனக்கு ரிதம் இல்லை, உடற்தகுதி இல்லை என பலரும் தங்களது கருத்துகளை தெரிவிக்கிறார்கள். இதையெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. எனது ஆட்டத்தை நான் ரசித்து விளையாடுகிறேன்” என்றார்.

பெங்கால் அணியின் வேகப்பந்து வீச்சுக்கு ஷமி தலைமை தாங்கி வருகிறார். அந்த அணியில் இந்திய அணிக்காக விளையாடிய ஆகாஷ் தீப் மற்றும் முகேஷ் குமாரும் இடம்பெற்றுள்ளனர்.

தேசிய அணித் தேர்வாளர்களைத் தொடர்பு கொண்டீர்களா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத ஷமி, தனது உடற்தகுதி குறித்து மட்டும் பேசினார். “நீங்கள் (செய்தியாளர்கள்) மைதானத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து எழுதலாம். நான் மைதானத்துக்குள் இருக்கிறேன்; விளையாடிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள சக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கும் ஷமி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதற்கிடையே, பெங்கால் அணி விளையாடி வரும் ஆட்டத்தில் தங்களுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையையும் ஷமி மீண்டும் வலியுறுத்தினார்.

“எங்களுக்கு சாதகமான ஆடுகளம் வேண்டும் என்று கேட்டோம். இந்தியாவில் எங்களிடம் இருப்பதைப் போன்ற வேகப்பந்து வீச்சு தாக்குதல் வேறு எந்த அணியிடமும் இல்லை. இதை நாங்கள் பலமுறை கேட்டுள்ளோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

மைதானத்தில் ஈரப்பதம் இருந்தது. இதுபோன்ற சூழலில் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஆடுகளத்திலிருந்து உதவி கிடைக்காதபோது நீண்ட நேரம் பந்துவீசி, முழு சக்தியையும் வீணடிப்பதில் எந்த புத்திசாலித்தனமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு வீரருக்கும் எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்பதை நான் திட்டமிட்டிருந்தேன்” என்று ஷமி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT