ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் இரவு லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சிஎஸ்கே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டது. இதனால் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மகளிர் கால்பந்தில் புழல் எஃப்சி வெற்றி: சென்னை கால்பந்து சங்கம் சார்பில் மகளிர் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ‘பி’ டிவிஷனில் நேற்று ராயப்பேட்டை வெஸ்லி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் எஸ்சி ஸ்டீட்ஸ் - டேலன்ட் எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிடைந்தது.
மற்ற ஆட்டங்களில் ஃபியல் ஸ்போர்ட்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் பெகாசஸ் அணியையும், புழல் எஃப்சி 6-0 என்ற கோல் கணக்கில் சுரேஷ் மெமோரியல் எஃப்சி அணியையும், ரைட் டிராக் எஃப்சி 9-0 என்ற கோல் கணக்கில் பிபிஎஃப் அணியையும் தோற்கடித்தன.
சென்னையின் எஃப்சி அணி தோல்வி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - பெங்களூரு எப்சி அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் ரியான் வில்லியம்ஸ் 42-வது நிமிடத்திலும், செர்டோ வோரமிலன் கோம் 88-வது நிமிடத்திலும் ஒரு கோலடித்தனர்.
சென்னை அணி தரப்பில் டேனியல் சிமா சுக்வு 33-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 டிரா, 8 தோல்விகளுடன் மொத்தம் 9 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 13-வது இடத்தில் உள்ளது.
இறுதிப் போட்டியில் சாட்விக்-ஷிராக் ஜோடி: தாய்லாந்தின் பாங்காக் நகரில் தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் நேற்று இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது மலேசியாவின் கோ சே ஃபெய், நூர் இசுதீன் ஜோடியை எதிர்ர்த்து விளையாடியது. 82 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சாட்விக் - ஷிராக் ஜோடி 19-21, 22-20, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
2019 மற்றும் 2024-ம் ஆண்டு தாய்லாந்து ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள சாட்விக் - ஷிராக் ஜோடி இம்முறை இறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவின் லியோ ராலி கார்னடோ, டேனியல் மார்த்தின் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தோனேஷிய ஜோடி அரை இறுதி சுற்றில் 21-15, 21-18 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஹீ ஜி டிங், ரென் ஜியாங் யு ஜோடியை வீழ்த்தியது.