மும்பை: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (7-ம் தேதி) இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்தத் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி இதே பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தானும் வரும் 15-ம் தேதி லீக் சுற்றில் மோதும் வகையில் அட்டவணை உள்ளது. ஆனால் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி களமிறங்காது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் கேப்டன்கள் பங்கேற்ற நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:
இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடர்பான நிலைமை எளிதான காரியம் அல்ல என்று நான் நினைக்கிறேன். இது என் கையில் இல்லை. ஐசிசி ஏதேனும் ஒரு தீர்வை யோசித்துக்கொண்டிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் இது மற்றொரு அரசாங்கத்திடம் இருந்தோ அல்லது நாட்டிலிருந்தோ வந்திருக்கிறது.
இந்த நிலையில் ஐசிசி எப்படி உதவ முடியும்? பாகிஸ்தானின் முடிவு என் கட்டுப்பாட்டில் இல்லை. அவர்களது முடிவுகளை என்னால் எடுக்க முடிந்தால் நன்றாக இருக் கும். பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பு நகரில் நடைபெற உள்ள போட்டியில் விளையாட வேண்டும் என்று எங்களிடம் கூறப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பையில் நாங்கள் பாகிஸ்தான் அணியை 3 முறை எதிர்கொண்டோம். அவற்றில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றோம். அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கொழும்பில் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், நாங்கள் விளையாடுவோம்.
எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுப்பு தெரிவிக்கவில்லை. அவர்கள்தான் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஐசிசி போட்டி அட்டவணையை வெளியிட்டுவிட்டது. எங்கள்விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன, நாங்கள் கொழும்புக்கு செல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.