விளையாட்டு

மே.இ.தீவுகள் போல் பாகிஸ்தான் அணியும் வீழ்ச்சியடையும் அபாயம்: கிரிக்கெட் வல்லுநர் எச்சரிக்கை

ஆர்.முத்துக்குமார்

இங்கிலாந்திடம் முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி 19 டெஸ்ட் போட்டிகளில் 14-ல் தோல்வி கண்டுள்ளது பாகிஸ்தான். இதனையடுத்து தவறு எங்கே என்று தோண்டித் துருவ ஆரம்பித்துள்ளனர், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தினர்.

பாகிஸ்தான் பவுலிங்கில் எந்த வித ஊடுருவலும் இல்லை. எந்த ஒரு தாக்கமும் இல்லை. பேட்டிங் கேட்கவே வேண்டாம், படுமோசம். எப்போதுமே பாகிஸ்தான் பெரிய பீல்டிங் அணி அல்ல என்பது தெரிந்ததே. இந்நிலையில், ஆஸ்மான் சமியுதின் என்ற கிரிக்கெட் நிபுணர் ஆங்கில கிரிக்கெட் ஊடகம் ஒன்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் சிக்கல்கள், சாதக பாதகங்களை துருவித் துருவி ஆராய்ந்துள்ளார். குறிப்பாக உள்நாட்டு கிரிக்கெட்டை பாகிஸ்தான் நிர்வாகம் எப்படி சீரழித்து வருகிறது என்பதை எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆஸ்மான் சமியுதின் கூறியது: “எந்த கிரிக்கெட் கட்டமைப்பை பாகிஸ்தான் தேர்வு செய்தாலும், அதில் குறைந்தது 10 முதல் 12 ஆண்டுகளாவது நிலைத்தன்மையுடன் தொடர வேண்டும். கடந்த 50 ஆண்டுகளில், குறிப்பாக 1953-ல் முதல் முதல்தர கிரிக்கெட் தொடங்கியதில் இருந்து, உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

2019-20-ல் அணிகளின் எண்ணிக்கை 16-லிருந்து 6 ஆகக் குறைக்கப்பட்டதால், ஏராளமான முதல்தர வீரர்கள் ஒரே இரவில் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை இழந்தனர். பின்னர் மீண்டும் 16 அணிகளாக விரிவுபடுத்தப்பட்டது. இத்தகைய அடிக்கடி நிகழும் மாற்றங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டின் தரத்தையே பாதித்துள்ளன. மேலும், உள்நாட்டு போட்டிகள் முன்பு 16 முதல்தர மைதானங்களில் நடத்தப்பட்ட நிலையில், சமீப ஆண்டுகளில் வெறும் 4 அல்லது 5 மைதானங்களிலேயே பெரும்பாலும் நடத்தப்படுகின்றன.

இதனால் அப்துல்லா ஷஃபீக், இமாம்-உல்-ஹக் போன்ற பேட்டர்கள் வெவ்வேறு ஆடுகளங்கள் மற்றும் சூழல்களுக்கு ஏற்ப தங்களை எவ்வாறு வளர்த்துக்கொள்ள முடியும்?

2021 முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நான்கு தலைவர்கள் மாறியிருப்பதும் மற்றொரு பிரச்சினை. ரமீஸ் ராஜா, நஜாம் சேத்தி, ஜகா அஷ்ரஃப், தற்போதைய தலைவர் மொஹ்சின் நக்வி என ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அணுகுமுறைகள் இருந்துள்ளன. தற்போதைய தலைவர் நாட்டின் உள்துறை அமைச்சராகவும் இருப்பதால், கிரிக்கெட்டுக்கு போதுமான நேரம் ஒதுக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

ஷஹீன் ஷா அப்ரிடி, பாபர் அசாம், அப்துல்லா ஷஃபீக், நசீம் ஷா போன்ற திறமையான வீரர்கள் சர்வதேச அரங்கில் சிறப்பாக அறிமுகமாகி பின்னர் பின்னடைவைச் சந்தித்திருப்பது, பாகிஸ்தான் தனது திறமைகளை சரியாகப் பயன்படுத்தத் தவறுவதைக் காட்டுகிறது. வீரர்களின் காயங்களை நிர்வகிப்பது, அவர்களின் வளர்ச்சியைத் திட்டமிடுவது உள்ளிட்ட அடிப்படை விஷயங்களில்கூட நிர்வாகங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை.

குறிப்பாக, ஷஹீன் அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களாக இருக்க வேண்டியவர்கள். ஆனால் நசீம் ஷா 2024 டிசம்பருக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. முழங்கால் காயத்துக்குப் பிறகு ஷஹீன் அப்ரிடி 27 டெஸ்ட் போட்டிகளில் 9-ல் மட்டுமே விளையாடியுள்ளார். காயத்திலிருந்து மீள்வதில் ஏற்பட்ட குழப்பம், அவசரமாக மீண்டும் களமிறக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஆகியவையும் அவரது பின்னடைவுக்கு காரணமாக இருக்கலாம்.

மேலும், பயிற்சியாளர் குழுவில் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்களும் வீரர்களை பாதித்துள்ளன. குறிப்பாக ஷஹீன் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது உடலை வலுப்படுத்த தொடர்ந்து பந்துவீச வேண்டிய நிலையில், அவர் கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்தர போட்டிகளில் மிகக் குறைவாகவே விளையாடியுள்ளார். நசீமின் நிலையும் இதேபோன்றதுதான்.

கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் பாகிஸ்தான் தனது திறமைகளை வீணடிப்பது அதிகரித்துள்ளது. திறமை இல்லாததால் அல்ல; இருக்கும் திறமையை முறையாக வளர்த்து, சரியான முறையில் நிர்வகிக்கத் தவறுவதால்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்ந்து பின்னடைவைச் சந்திக்கிறது.

லீட்ஸில் நடைபெற்ற போட்டியின்போது பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக வந்த ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததை நாம் கவனிக்க வேண்டும். அணி தோல்வியடைவதால் மட்டும் ரசிகர்கள் கோபத்தில் இல்லை; பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வகிக்கப்படும் விதத்தில்தான் அவர்கள் சோர்வடைந்துள்ளனர்.

இந்நிலை தொடர்ந்து நீடித்தால், பாகிஸ்தானில் கிரிக்கெட்டுக்கும் ஹாக்கி விளையாட்டுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியே ஏற்படக்கூடும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சந்தித்து வரும் பின்னடைவை போல பாகிஸ்தான் கிரிக்கெட்டும் சந்திக்கக்கூடும்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT