கோவை: ஆடவருக்கான தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஒடிசா அணி 6-4 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது. ஒடிசா அணி சார்பில் பில்கான் ஓரம் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். அலோக் குஜூர், தீபக் பிரதான், அமித் கிரோ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
மற்றொரு அரை இறுதியில் மத்திய பிரதேசம் 2-0 என்ற கோல் கணக்கில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தியது. அந்த அணி தரப்பில் ராஜ்வீர் சிங் (56-வது நிமிடம்), ஆஷிர் ஆதில் கான் (58-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். நாளை (8-ம் தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் ஒடிசா - மத்திய பிரதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.