சென்னை: எதிர்வரும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2027 தொடருக்கு இதுவரை தகுதி பெற்ற அணிகள் எவை என்பது குறித்து பார்ப்போம்.
ஐசிசி 14-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2027-ம் ஆண்டு அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 நடைபெற உள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 3 நாடுகள் இணைந்து உலகக் கோப்பை தொடரை நடத்த உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் 24 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளன.
இந்த தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்தத் தொடரில் சில மாற்றங்களை செய்துள்ளது ஐசிசி. அந்த வகையில் சூப்பர் சீரிஸ், குரூப் ஸ்டேஜ், சூப்பர் 7, அரை இறுதி, இறுதிப் போட்டி என 4 சுற்றுகளை கொண்டதாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சூப்பர் சீரிஸில் 12, 13 மற்றும் 14-வது இடங்களில் உள்ள அணிகள் மோதும்.
இதில் வெற்றி பெறும் அணி குரூப் ஸ்டேஜில் இணையும். ரவுண்ட் ராபின் முறையில் குரூப் சுற்று நடத்தப்படும். இதில் 12 அணிகள் பங்கேற்கும்.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2027 தொடருக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்
>> இந்தியா
>> ஆஸ்திரேலியா
>> இங்கிலாந்து
>> தென் ஆப்பிரிக்கா
>> நியூஸிலாந்து
>> இலங்கை
>> பாகிஸ்தான்
>> வங்கதேசம்
>> ஆப்கானிஸ்தான்
>> ஜிம்பாப்வே
இதுவரை மொத்தம் 10 அணிகள் இந்த தொடருக்கு முன்னேறி உள்ளன. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணி அண்மையில் இணைந்தது. தொடரை நடத்தும் அணியை தவிர்த்து ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பட்டியலில் ‘டாப் 8’ இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக இந்த தொடருக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீதம் உள்ள இரண்டு இடத்துக்கு 10 அணிகள் பங்கேற்று விளையாடும் தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி மற்றும் சூப்பர் சீரிஸ் தொடரில் வெற்றி பெறும் அணியும் தகுதி பெறும். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள் ரசிகர்கள், பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.