ஹாமில்டன்: இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது சர்வதேச டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. டிம் செய்பர்ட், கிளென் பிலிப்ஸ் அதிரடியால் நியூஸிலாந்து வெற்றி கண்டது. இருந்தபோதும் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்திய அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வந்தது. முதல் 3 போட்டிகளில் இந்தியாவும், 4-வது போட்டியில் நியூஸிலாந்தும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் நேற்று பகல் 12.30 மணிக்கு ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சன் 4 ரன்களிலும், அபிஷேக் சர்மா ஒரு ரன்னிலும் வீழ்ந்தனர். திலக் வர்மா 6, புவனேஷ்வர் குமார் 6 ரன்கள் சேர்த்தனர். இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் தலா 5 பவுண்டரி, சிக்ஸர்களுடன் 61 ரன்கள் விளாசினார். கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தன் பங்குக்கு 23 பந்துகளில் 50 ரன்களை (3 பவுண்டரி, 4 சிக்ஸர்) அதிரடியாகக் குவித்தார்.
கடைசி நேரத்தில் நமன் திர் 33 ரன்களும், நிதிஷ்குமார் ரெட்டி 22 ரன்களும் குவிக்க இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்து. நியூஸிலாந்து அணி தரப்பில் ஆடம் மில்னே 4, நேதன் ஸ்மித், பிளேர் டிக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து அணி 18 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்து வெற்றி கண்டது.
ஃபின் ஆலன் 2, டேரில் மிட்செல் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தாலும் டிம் செய்பர்ட் 50 பந்துகளில் 93 ரன்களை (11 பவுண்டரி, 5 சிக்ஸர்) விளாசி தனது அணியை வெற்றி பெறச் செய்தார். கிளென் பிலிப்ஸ் 38 பந்துகளில் 65 ரன்களும், பெவன் ஜேக்கப்ஸ் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதையடுத்து இந்தத் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. ஆட்டநாயகனாக ஆடம் மில்னேவும், தொடர்நாயகனாக கிளென் பிலிப்ஸும் தேர்வாயினர்.
ஒரு நாள் தொடர்
இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 4-ம் தேதி தொடங்குகிறது. ஆக்லாந்திலுள்ள ஈடன் பார்க் மைதானத்தில் முதலாவது போட்டி நடைபெற உள்ளது.
இஷான் கிஷன் 2 ஆயிரம் ரன்கள் குவிப்பு
நேற்றைய போட்டியின்போது சர்வதேச டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை இஷான் கிஷன் செய்தார். அவர் இதுவரை 69 டி20 போட்டிகளில் விளையாடி 2016 ரன்களைக் குவித்துள்ளார். மேலும், இந்த சாதனையை செய்துள்ள 7-வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஓராண்டில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவின் சாதனையையும் அவர் முறியடித்தார். சூர்யகுமார் யாதவ் 2022-ல் 1,164 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டில் இஷான் கிஷன் 37 போட்டிகளில் பங்கேற்று 1,220 ரன்களைக் குவித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.