டாக்கா: நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் நேற்று டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 68, டீன் ஃபாக்ஸ்கிராப்ட் 59, வில் யங் 30, நேதன் ஸ்மித் 21 ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ரிஷாத் ஹோசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
248 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 48.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சைஃப் ஹசன் 57, தவுஹித் ஹிர்தோய் 55, லிட்டன் தாஸ் 45 ரன்கள் சேர்த்தனர்.நியூஸிலாந்து அணி சார்பில் பிளேயர் டிக்னர் 4, நேதன் ஸ்மித் 3 விக்கெட்களை வீழ்த்தினர். 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது.