வெலிங்டன்: நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வரும் 2026-ம் ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11-ம் தேதி வதோதராவிலும், 2-வது ஒருநாள் போட்டி 14-ம் தேதி ராஜ்கோட்டிலும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 18-ம் தேதி இந்தூரிலும் நடைபெறுகிறது.
டி20 தொடரின் முதல் ஆட்டம் 21-ம் தேதி நாக்பூரிலும், 2-வது ஆட்டம் 23-ம் தேதி ராய்ப்பூரிலும், 3-வது ஆட்டம் 25-ம் தேதி குவாஹாட்டியிலும், 4-வது ஆட்டம் 28-ம் தேதி விசாகப்பட்டினத்திலும், கடைசி மற்றும் 5-வது போட்டி 31-ம் தேதி திருவனந்தபுரத்திலும் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடர்களுக்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டித் தொடரில் சீனியர் பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன் இடம் பெறவில்லை. தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 தொடரில் பங்கேற்பதால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் வில்லியம்சன் சேர்க்கப்படவில்லை. அதேவேளையில் சுழற்பந்து வீச்சாளரான ஜெய்டன் லெனாக்ஸ் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இளம் வீரர்களான கிறிஸ்டியன் கிளார்க், ஆதி அசோக், ஜோஷ் கிளார்க்சன், நிக் கெல்லி, மைக்கேல் ரே ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இதில் சாண்ட்னர் டி20 தொடரில் மட்டும் விளையாட உள்ளார்.
ஒருநாள் போட்டி அணி: மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டேவன் கான்வே, ஜாக் ஃபோல்க்ஸ், மிட்ச் ஹே, கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்.
டி20 அணி: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ஜேக்கப் டஃபி, ஜாக் ஃபோல்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், பெவன் ஜேக்கப்ஸ், ஜேம்ஸ் நீஷம், டிம் ராபின்சன், இஷ் சோதி.