மவுண்ட் மவுங்கனி: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று மவுண்ட் மவுங்கனியில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 333 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக தொடக்க வீரரான வில் யங் 108 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் விளாசினார். இது அவரது 5-வது சதமாக அமைந்தது. முன்னதாக அவர், 5 ரன்களில் இருந்த போது இரு முறை ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்தார். அகிப் நபி வீசிய அடுத்தடுத்த பந்துகளில் கொடுத்த கேட்ச்சை ரோஹித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் கோட்டை விட்டனர். இதற்கான பலனை இந்திய அணி அனுபவித்தது.
வில் யங்குக்கு உறுதுணையாக விளையாடிய டிம் ஷெய்பர்ட் 48 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சேர்த்தார். இது அவரது முதல் அரை சதமாக அமைந்தது. ஃபின் ஆலன் 41, கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 24 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அகிப் நபி, குர்னூர் பிரார், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
ஒரு கட்டத்தில் நியூஸிலாந்து அணி 350 ரன்களுக்கு மேல் குவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வில் யங் ஆட்டமிழந்த பின்னர் அந்த அணியின் ரன் குவிப்பில் சுணக்கம் ஏற்பட்டது. அவர், வெளியேறிய போது ஸ்கோர் 37 ஓவர்களில் 256 ஆக இருந்தது. கடைசி 10 ஓவர்களில் 68 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது.
334 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி மேட் ஹென்றி வீசிய முதல் ஓவரிலேயே 3 விக்கெட்களை பறிகொடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காத நிலையில் நடையை கட்டினர். ரன் கணக்கை தொடங்கும் முன்னரே 3 விக்கெட்களை பறிகொடுத்த இந்திய அணியால் அதன் பின்னர் மீள முடியாமல் போனது.
மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களில் கைல் ஜேமிசன் பந்தில் வெளியேற 9 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என நிலைமை மோசமானது. அப்போது அக்சர் படேல் கொடுத்த எளிதான கேட்ச்சை நிக் கெல்லி தவறவிட்டார். இதனால் சற்று தாக்குப்பிடித்து விளையாடிய அக்சர் படேல் 21 ரன்களில் மேத்யூ பிஷர் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து இஷான்கிஷன் 27 ரன்களில் மேட் ஹென்றி பந்தில் போல்டானார்.
அகிப் நபி 5, குல்தீப் யாதவ் 1, நமன் திர் 21, குர்னூர் பிரார் 2 ரன்களில் நடையை கட்ட இந்திய அணி 26.4 ஓவர்களில் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் நியூஸிலாந்து அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் மேட் ஹென்றி 9.4 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் 27 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். மேத்யூ பிஷர் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. முதல் 2 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி கண்டிருந்தது. 3-வது ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை (15-ம் தேதி) நடைபெறுகிறது.