விஜயவாடா: தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டியில் ரித்விக் சஞ்சீவி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் 87-வது தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்தன. நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஹட்சன் பாட்மிண்டன் சென்டர் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரித்விக் சஞ்சீவியும், ஹரியானா வீரர் பாரத் ராகவும் மோதினர்.
இதில் ரித்விக் சஞ்சீவி 21-16, 22-20 என்ற புள்ளிகள் கணக்கில் பாரத் ராகவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். முன்னதாக அரை இறுதிப் போட்டியில் ரித்விக் சஞ்சீவி 21-16, 17-21, 22-20 என்ற கணக்கில் கேரள வீரர் கிரண் ஜார்ஜை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரித்விக் சஞ்சீவின் வெற்றி குறித்து அவரது பயிற்சியாளரும், ஹட்சன் பாட்மிண்டன் சென்டரின் தலைமைப் பயிற்சியாளருமான ரஜினிகாந்த் கூறும்போது, “இந்தப் போட்டித் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே ரித்விக் சஞ்சீவி அபாரமாக விளையாடி வெற்றி கண்டார். அவரது ஆட்டத்தில் இருந்த ஒழுங்கும், முக்கிய நேரங்களில் அவர் குவித்த புள்ளிகளும் அவர் சாம்பியன் பட்டம் வெல்ல உதவியாக இருந்தன. போட்டிக்காக அவர் பெற்ற பயிற்சியும், அதை சரியான நேரத்தில் சிறப்பாக செயல்படுத்தியதுமே வெற்றிக்கு காரணமாக அமைந்தன” என்றார்.