மெக்கல்லம் மற்றும் ஜோ ரூட்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்திலேயே வெல்ல முடியாமல் 2-2 என்று டிரா செய்ததும் ஆஷஸ் தொடாரை 4-1 என்று இழந்ததும் பயிற்சியாளர் மெக்கல்லம்மின் அணுகுமுறைகள் மீது கடும் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில் இங்கிலாந்து வீரர்கள் அவருக்கு ‘முட்டு’க் கொடுக்கும் பணியைத் திறம்படச் செய்து வருகின்றனர். இந்தப் பட்டியலில் இப்போது இணைந்திருப்பவர் ஜோ ரூட்.
“நான் கற்ற பயிற்சியாளர்களிலேயே மெக்கல்லம்தான் சிறந்தவர்” என்று ஜோ ரூட் இப்போது புது உருட்டு உருட்டியுள்ளார். மெக்கல்லம் மீது என்ன விமர்சனம் என்றால் வெற்றி தோல்வி பற்றி கவலை வேண்டாம். உங்கள் பேட்டிங்கை மகிழ்ச்சியுடன் ஆடுங்கள். அணியை விட்டு உங்களை ஒரு போதும் தூக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற அணுகுமுறையே.
இதனால் அணி வீரர்கள் வெளியே போகும் பந்தையெல்லாம் தொட்டுத் தொட்டு அவுட் ஆனதால், ஆஸ்திரேலியா இங்கிலாந்தைக் குழிதோண்டிப் புதைத்து விட்டது. இந்த விமர்சனங்களையெல்லாம் மீறி அவரின் மிருதுவான வீரர்களைப் பாதுகாக்கும் அணுகுமுறையினால் மெக்கல்லம் இங்கிலாந்து வீரர்கள் மத்தியில் ஹீரோவானார். அதனால் அவருக்கு தொடர்ந்து முட்டுக் கொடுத்து வருகின்றனர்.
ஸ்டீவ் வாஹ் தன்னிடம் கேப்டன்சி வந்த போது ஆஸ்திரேலியப் பிட்ச்களை பேட்டிங் பிட்ச்களாக மாற்றி ரன்களைக் குவித்து பிறகு மெக்ரா, ஷேன் வார்ன், கில்லஸ்பியை வைத்து எதிரணியினரின் கதையை முடித்து வந்தார். அதே போன்ற அணுகுமுறையைத்தான் மெக்கல்லம் வந்த பிறகும் இங்கிலாந்து கடைப்பிடித்தது. இதில் சிற்சில சக்சஸ்களையும் ருசி பார்த்தது. ஆனால் கிரிக்கெட் ஆட்டம் பன்முகத்தன்மை கொண்ட அணுகுமுறையைக் கோருவது. எல்லா சூழ்நிலைகளிலும் ‘பாஸ்பால்’ பொருந்தக் கூடியது அல்ல என்பதை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இருமுறைக்கு மேல் இங்கிலாந்துக்கு பாடம் நடத்தியும் அவர்கள் தன்னுணர்வு பெறவில்லை. இந்நிலையில், வீரர்கள் மெக்கல்லமிற்கு முட்டுக் கொடுப்பது வழக்கமாகி வருகிறது, இப்போது ஜோ ரூட்.
“நான் உடன் பணியாற்றிய பயிற்சியாளர்களில் ஆகச்சிறந்தவர் மெக்கல்லம். நிச்சயமாக ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தோல்வி ஏமாற்றம்தான். ஆனால், இந்த அணியிடமிருந்து இன்னும் உத்வேகமான சில விஷயங்கள் வரும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
என்னுடைய பேட்டிங்கையே எடுத்துக் கொள்ளுங்கள், மெக்கல்லம் வந்த பிறகே பத்து மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்றே கூற வேண்டும். வெற்றி பெற்றால் அது ஒரு பெரிய உற்சாகம்தான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், என் வாழ்க்கையின் சிறந்த தருணத்தில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். சில நிபுணர்களின் கீழ் நீங்கள் தொடர்ந்து முன்னேறுவீர்கள் அத்தகையவர் மெக்கல்லம் என்று நான் கருதுகிறேன்” என்றார்.
ஜோ ரூட்டைப் பொறுத்தவரை இது உண்மையாகக் கூட இருக்கலாம், ஏனெனில் 2022-ல் மெக்கல்லம் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அதன் பிறகே உலகின் முன்னணி பேட்டரானார் ஜோ ரூட், 46 டெஸ்ட்களில் 16 சதங்களை எடுத்தார். அவரது பேட்டிங் சராசரி 56. ரூட் கரியரில் இந்தக் காலக்கட்டம்தான் சிறந்தது.
ஆனால், தன்னுடைய டெக்னிக், தான் வந்த பாரம்பரியத்தை விடுத்து பின்னால் வந்த பயிற்சியாளரினால்தான் முன்னேற்றம் கண்டேன் என்று கூறுவது ரூட் ஏன் சில வேளைகளில் தன்னம்பிக்கையிழந்து ஆடுகிறார் என்பதற்கான சாட்சியமாக விளங்குகிறது.