விளையாட்டு

தோனிக்கு மீண்டும் காயம்: சிஎஸ்கே பயிற்சியாளர் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

டெக்ஸ்டர்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் உடல்நிலை குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் வெளியிட்டுள்ள புதிய தகவல், சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த தோனிக்கு, தற்போது இரண்டாவது முறையாகக் காயம் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டீபன் பிளெமிங், தோனியின் தற்போதைய நிலை குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது "தோனி போட்டியில் விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். இருந்தாலும், கணுக்கால் தசைக்காயம் என்பது ஒரு சிக்கலான விஷயம். அவர் வேகமாக ஓடும்போது அது மீண்டும் கிழிந்தால், அவரால் மேற்கொண்டு விளையாட முடியாமல் போகும். 

நாங்கள் ஆரம்பத்திலேயே அவரைத் தயார்படுத்த முயற்சித்தோம், ஆனால் பயிற்சி ஆட்டத்தின் போது அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டது என்பதுதான் எனது புரிதல். அதன்பிறகு, அந்தத் தசையில் அசைவுகளைக் கொண்டுவர அவர் கடினமாக உழைத்து வருகிறார், ஆனால் அதில் ஒரு பின்னடைவு ஏற்பட்டதால், நாங்கள் நினைத்ததை விட அதிக காலம் எடுத்துக்கொள்கிறது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக கடந்த மார்ச் 28-ம் தேதி நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்கியது. இந்த சீசனின் தொடக்கத்திலேயே காலின் பின் பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு பாதிப்பு காரணமாக தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்தது. இதனால் இந்த சீசனில் முதல் இரண்டு வார கால ஆட்டங்களை அவர் தவறவிடக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. இப்போது அது ஒரு மாத காலத்தை நெருங்கிவிட்டது.

ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முக்கியமான கட்டத்தில் இருக்கும் வேளையில், தோனியின் இந்த விலகல் அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. விக்கெட் கீப்பிங் மற்றும் களத்தில் ருதுராஜுக்கு தோனி அளிக்கும் ஆலோசனைகள் சென்னை அணிக்கு மிகப்பெரிய பலமாகும். 

தற்போது அது இல்லாத காரணத்தால் சிஎஸ்கே அணி தடுமாறி வருவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் தோனிக்கு மீண்டும் காயம் ஏற்பட்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT