இஸ்மாயில் சைபாரி

 
விளையாட்டு

ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மொராக்கோ | FIFA WC 2026

செய்திப்பிரிவு

போஸ்டன்: பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் உள்ள ஜில்லெட் மைதானத்தில் நேற்று ‘சி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - மொராக்கோ அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் மொராக்கோவின் பிரஹிம் டயஸ் கொடுத்த அசாத்தியமான த்ரூ-பாலை பெற்ற நடுகள வீரரான இஸ்மாயில் சைபாரி, ஸ்காட்லாந்து டிஃபென்டர்களை ஏமாற்றி பந்தை மிகத் துல்லியமாக கோல் வலையின் மேல் கார்னரை நோக்கி அடித்தார்.

இதனால் மொராக்கோ அணி 1-0 என முன்னிலை பெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தில் ஸ்காட்லாந்து அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆண்டி ராபர்ட்சன் கிராஸ் செய்த பந்தை, கோல் போஸ்ட்டின் பின்புற பகுதியில் இருந்த ஜான் மெக்கின்னால் எட்டிப்பிடிக்க முடியாமல் போனது.

ஸ்காட்லாந்து அணி ஆட்டத்தின் பிற்பாதியில் தீவிரமாகப் போராடியது. குறிப்பாக ஸ்காட் மெக்டொமினே, ஜான் மெக்கின் ஆகியோர் பெனால்டி வாய்ப்புகளைக் கோரிய போதிலும் நடுவரால் அது மறுக்கப்பட்டது. 52-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் அஷ்ரப் ஹக்கிமி உதைத்த கார்னர் கிக்கை பிலால் எல் கன்னூஸ் கோல் வலையை நோக்கி தலையால் முட்டினார்.

ஆனால் அதை ஸ்காட்லாந்து கோல்கீப்பர் கன் தடுத்து நிறுத்தினார். ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஸ்காட்லாந்து அடுத்தடுத்து கார்னர் வாய்ப்புகளைப் பெற்று அழுத்தம் கொடுத்தாலும், மொராக்கோவின் வலுவான தடுப்பாட்டத்தை மீறி அவர்களால் இலக்கை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்க முடியவில்லை.

முடிவில் மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. நடப்பு தொடரில் அந்த அணி தனது முதல் ஆட்டத்தை பிரேசிலுக்கு எதிராக 1-1 என டிரா செய்திருந்தது.

தற்போதைய வெற்றியின் மூலம் மொராக்கோ அணி 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடத்தில் உள்ளதுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொண்டுள்ளது.

முதல் போட்டியில் ஹைதியை வீழ்த்தியிருந்த ஸ்காட்லாந்து அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 24-ம் தேதி பலம்வாய்ந்த பிரேசில் அணியை எதிர்கொள்கிறது. அன்றைய தினம் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் மொராக்கோ அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஹைதி அணியை சந்திக்கிறது.

SCROLL FOR NEXT