டேமியன் மார்ட்டின்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்டர் டேமியன் மார்ட்டின் (54), குவீன்ஸ்லாந்து மாகாண மருத்துவமனையில் மூளை அழற்சி அல்லது மூளைக்காய்ச்சல் (Meningitis) நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த டிசம்பர் 26, பாக்ஸிங் டே அன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை முதல் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் மார்டினுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேரன் லீமன், “டேமியன் மார்டினுக்கு நிறைய அன்பும் பிரார்த்தனைகளும். தைரியமாக போராடுங்கள். குடும்பத்தினருக்கு என் அன்பு,” என்று X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மார்டினின் நெருங்கிய நண்பரும் முன்னாள் விக்கெட் கீப்பருமான ஆடம் கில்கிரிஸ்ட், ஊடகம் ஒன்றில் பேசும்போது, “அவருக்கு மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது மனைவி அமாண்டா மற்றும் குடும்பத்தினருக்கு, உலகம் முழுவதும் இருந்து பிரார்த்தனைகளும் நல்வாழ்த்துகளும் வந்து கொண்டிருக்கின்றன,” என்று கூறினார்.
டேமியன் மார்ட்டின், கிரிக்கெட் உலகின் சிறந்த ஸ்ட்ரோக் பிளேயர்களில் ஒருவர். 1992 முதல் 2006 வரை ஆஸ்திரேலிய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 6 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2000-ம் ஆண்டு மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட அவர், ஸ்டீவ் வாஹ் தலைமையிலான invincibles என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்தார்.
2006-ம் ஆண்டு ஆஷஸ் தொடரின் நடுவில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தனது டெஸ்ட் வாழ்க்கையில் 4406 ரன்கள், 13 சதங்களுடன் அவர் 46.37 என்ற சராசரி வைத்திருந்தார்.
ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட்டிலும் டேமியன் மார்ட்டின் ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் பங்களிப்பு செய்துள்ளார். 2003 உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில், இறுதிப்போட்டியில், இந்தியாவுக்கு எதிராக 88 ரன்கள் குவித்தார். அந்த போட்டியில் சதம் விளாசிய ரிக்கி பாண்டிங்குடன் சேர்ந்து 234 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 5346 ரன்கள், சராசரி 40.80, ஐந்து சதங்கள்.
விளையாட்டு வாழ்க்கைக்குப் பிறகு சில காலம் வர்ணனையாளராக பணியாற்றிய மார்ட்டின், சமீப ஆண்டுகளில் பொதுவெளியில் அதிகமாக தோன்றாமல் அமைதியான வாழ்க்கை நடத்தி வந்தார். நடந்து முடிந்த மெல்போர்ன் - பாக்ஸிங் டே டெஸ்ட் குறித்து X தளத்தில், “பழைய தலைமுறை மீண்டும் விளையாட வாய்ப்பு இருந்தால், இதுவே அந்தத் தருணம். பாக்ஸிங் டே டெஸ்ட் – உண்மையான களைகட்டும் அரங்கம்,” என்று அவர் பதிவிட்டிருந்தார்.
தற்போது கிரிக்கெட் உலகமே டேமியன் மார்ட்டின் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறது.