சவுத்தாம்டன்: கவுன்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மானவ் சுதாரின் சிறப்பான சுழற்பந்து வீச்சால் ஹாம்ப்ஷயர் அணியை இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வார்விக்ஷையர் அணி.
சவுத்தாம்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வார்விக்ஷையர் அணி முதல் இன்னிங்ஸில் 398 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட் செய்த ஹாம்ப்ஷயர் முதல் இன்னிங்ஸில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. பாலோ-ஆன் பெற்ற ஹாம்ப்ஷயர் அணி 279 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நிலையில் 154 ரன்களுக்கு சுருண்டது. இதனால் வார்விக்ஷையர் அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுழற்பந்து வீச்சாளரான மானவ் சுதார் முதல் இன்னிங்ஸில் 15 ஓவர்களை வீசி 42 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும், 2-வது இன்னிங்ஸில் 23.3 ஓவர்களை வீசி 52 ரன்களை வழங்கி 4 விக்கெட்களையும் வீழ்த்தினார்.