பயிற்சியாளர் பாரத் அருண்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆர்சிபி தோல்வி அடைந்த போட்டியில் லக்னோ வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் ஒரு அற்புதமான பந்தில் விராட் கோலியை பவுல்டு செய்தார். அந்தப் பந்தை அவர் எப்படி வீசினார் என்று விராட் கோலியே ஆச்சரியப்பட்டதாக பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார்.
பொதுவாக வெகப்பந்து வீச்சாளர்கள் பந்தைக் காற்றில் உள்ளே ஸ்விங் செய்து பிட்ச் ஆன பிறகு வெளியே எடுப்பார்கள், இது ஆடுவதற்கு மிகக் கடினம், ஆனால் விராட் கோலிக்கு அன்று பிரின்ஸ் யாதவ் வீசிய பந்து அப்படியே மாற்றாக காற்றில் வெளியே லேசாக போகுமாறு போக்குக் காட்டி பிட்ச் ஆன பிறகு உள்ளே வந்து ஸ்டம்ப்பைப் பதம் பார்த்தது. இது வீசுவதற்கு அத்தனை சுலபமல்ல என்கிறார் பயிற்சியாளர் பாரத் அருண். கனவுப்பந்து அது என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் பாரத் அருண் கூறியதாவது: “கோலியுடன் பேசினோம். ‘அந்த மாதிரி பொதுவாக வீச முடியாதே எப்படி பிரின்ஸ் யாதவ் அந்தப் பந்தை வீசினார்?’ என்று விராட் கோலி ஆச்சரியப்பட்டார். அவுட் ஸ்விங் பவுலர்களுக்கு பந்து காற்றில் ஸ்விங் ஆகும். பிட்ச் ஆனவுடன் பந்து உள்ளே வரும். பந்தின் தையல் இருக்கும் கோணத்தைப் பொறுத்தும் பிட்ச் ஆகும் இடத்தைப் பொறுத்தும் இது தீர்மானிக்கப்படும். இப்படிப்பட்ட பந்தை எந்த ஒரு பவுலரும் நினைத்தவுடனெல்லாம் வீசி விட முடியாது.
தொடர்ந்து ஸ்விங் பவுலிங்கில் இத்தகைய பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே சாத்தியமாகும். அது ஒரு கனவுப்பந்து. பிரின்ஸ் யாதவ் கடந்த சீசனிலேயே தன் திறமைகளின் சுவட்டைக் காட்டினார். இந்த சீசனின் போது பயிற்சி முகாம்களில் அவரது பலம், பலவீனங்களை ஆராய்ந்தோம். திட்டத்தைச் செயல்படுத்துவது பற்றி நிறைய விவாதித்தோம், பயிற்சியிலும் அதை செயல்படுத்தினோம். ” என்று பிரின்ஸ் யாதவ் குறித்து கூறிய பாரத் அருண், ‘பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், மோசின் கான் போன்றோர் இந்திய அணியில் நிச்சயம் தேர்வு செய்யப்படுவார்கள்.’ என்றார்.