விளையாட்டு

CWG 2026: கண்ணிவெடியில் கால் இழந்த சோமன் ராணா பாரா தடகளத்தில் தங்கம் வென்று அசத்தல்

வேட்டையன்

கிளாஸ்கோ: நடப்பு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் சோமன் ராணா, பாரா தடகளத்தில் தங்கம் வென்றார். ஆடவருக்கான குண்டு எறிதல் எஃப்57 பிரிவில் முதலிடம் பிடித்து இந்த சாதனையை அவர் படைத்தார்.

இந்திய ராணுவத்தில் கடந்த 2005-ல் காஷ்மீரில் பணியில் இருந்த போது கண்ணிவெடியில் கால் வைத்ததால் வலது காலினை இழந்தார். அதற்கு முன்பு வரை குத்துச்சண்டையில் ஆர்வம் செலுத்தி வந்த அவர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனை படைக்க விரும்பினார். ஆனால், காலம் அதை மாற்றியது. இப்போது தனது விடாமுயற்சியினால் பாரா தடகள வீரராக தேசத்துக்கு பெருமை தேடி தந்துள்ளார்.

“நான் நமது தேசத்தின் முன்னணி குத்துச்சண்டை வீரர்களுடன் பலப்பரீட்சை செய்த்துள்ளேன். விஜேந்தர் சிங் (ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர்), கே.சி.குட்டப்பா (நடப்பு காமன்வெல்த்தில் இந்திய அணி பயிற்சியாளர்), சோம் பகதூர் (காமன்வெல்த்தில் வெள்ளி வென்றவர்) ஆகியோர் என்னுடன் பயிற்சி மேற்கொண்டவர்கள்.

கடந்த 2005-ல் தேசிய சீனியர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றேன். அதில் நான் பதக்கம் வென்றிருந்தால் இந்நேரம் வாழ்க்கை வேறு விதமாக இருந்திருக்கும். அதன் பின்னர் நான் பணிக்கு திரும்பினேன். அப்போது கண்ணிவெடியில் எனது வலது காலினை இழந்தேன்.

சிகிச்சைக்கு பின்னர் நிர்வாக ரீதியான பணிகளை சுமார் 10 ஆண்டுகாலம் மேற்கொண்டேன். எனக்கு சிறு வயது முதலே விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம். சிறுவனாக இருந்தபோது வாலிபால் விளையாடினேன். ராணுவத்தில் இணைந்த பிறகு தேசிய அளவிலான குத்துச்சண்டை வீரராக உருவெடுத்தேன்.

அத்தகைய சூழலில்தான் கடந்த 2017-ல் புனேவில் ராணுவ பாராலிம்பிக் குறித்து எனக்கு தெரியவந்தது. நான் குண்டு எறிதல் முயற்சி செய்யலாம் என கருதினேன். அங்கிருந்து இந்த பயணம் தொடங்கியது. எனது உடலின் மேல் பகுதி வலுவை கொண்டு விளையாடி வருகிறேன். எப்படியோ நான் விளையாட்டில் இன்னும் என்னை ஈடுபடுத்திக் கொண்டு வருவது மகிழ்ச்சி தருகிறது” என்று 43 வயதான சோமன் ராணா தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ல் பாரா தடகள வீரராக பயிற்சியை தொடங்கிய அவர், இப்போது தேசத்துக்காக தங்கம் வென்று கொடுத்துள்ளார். தனது அடுத்த இலக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் ‘பாராலிம்பிக்’ போட்டிதான் என கிளாஸ்கோவில் தங்கம் வென்ற பிறகு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT