விளையாட்டு

18 வயதிலேயே வரலாற்றை எழுதும் ஸ்பெயினின் லமின் யமால் - உலகக் கால்பந்தின் புதிய அத்தியாயம்!

சு.சி.வீரகுந்தவை

2026 உலகக் கோப்பை காலிறுதியில் பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியின் இறுதி நிமிடங்கள். வெற்றிக்காக போராடிய ஸ்பெயின் அணியின் ஒவ்வொரு நகர்வையும் உலகம் உற்றுநோக்கிக் கொண்டிருந்தது. அந்தப் போட்டியில் கோல் அடித்தவரும் வேறு, வெற்றியை உறுதி செய்தவரும் வேறு. ஆனால், பந்து ஒவ்வொரு முறை லமின் யமாலின் கால்களைத் தொட்டபோதும், அடுத்த சில நொடிகளில் என்ன மாற்றம் நிகழப் போகிறது என்ற எதிர்பார்ப்பே மைதானம் முழுவதும் பரவியிருந்தது.

18 வயதிலேயே உலகக் கோப்பை அரையிறுதியில் ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாறுவது சாதாரண விஷயமல்ல. அதைவிட, உலகக் கால்பந்தின் அடுத்த முகமாக பல கோடி ரசிகர்களும், முன்னாள் ஜாம்பவான்களும் ஒரே குரலில் சுட்டிக்காட்டுவது இன்னும் அரிதான விஷயம். இன்று லமின் யமால் அந்த அரிதான உயரத்தில் நிற்கிறார். ஆனால், அந்த உயரத்தின் பின்னால் இருக்கும் கதை, வெற்றிகளால் மட்டுமே எழுதப்படவில்லை; வறுமை, விடாமுயற்சி, கனவு மற்றும் அசாதாரண திறமையால் உருவானதாகும்.

ரோகஃபொண்டாவின் தெருக்களில் பிறந்த கனவு

2007 ஜூலை 13 அன்று ஸ்பெயினின் பார்சிலோனா மாநகரப் பகுதியில் உள்ள எஸ்ப்ளூகெஸ் டெ லோப்ரெகாட் நகரில் மொராக்கோவைச் சேர்ந்த தந்தை மொனிர் நஸ்ராவிக்கும், எக்குவட்டோரியல் கினியாவைச் சேர்ந்த தாய் ஷீலா எபானாவுக்கும் மகனாக லமின் யமால் நஸ்ராவி எபானா பிறந்தார். சிறுவயதிலேயே பெற்றோர் அவருக்கு ஒரு சிறந்த கால்பந்து வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக, தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர்.

பெற்றோர் பிரிந்து வாழ்ந்ததால், கட்டலோனியாவின் மத்தாரோ நகரில் உள்ள ரோகஃபொண்டா (Rocafonda) என்ற தொழிலாளர் மக்கள் வாழும் பகுதியில்தான் அவரது குழந்தைப் பருவம் கழிந்தது. சிறிய வீடு, குறைந்த வருமானம்… ஆனால், அந்த வீட்டில் பெரிய கனவுகள் மட்டும் தினமும் வளர்ந்து கொண்டே இருந்தன. தந்தை ஓவியராகவும், தாய் உணவகப் பணியாளராகவும் கடுமையாக உழைத்தனர். மகன் கால்பந்து விளையாட வேண்டும் என்ற ஒரே ஆசைக்காக, தங்களின் சிரமங்களை அவர்கள் ஒருபோதும் அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை.

பள்ளி முடிந்ததும் தெருவே யமாலின் மைதானமாக மாறிவிடும். கான்கிரீட் தரை, குறுகிய இடம், வயதில் மூத்த சிறுவர்களுடன் விளையாடுவது என இவையெல்லாம்தான் அவரது முதல் பயிற்சியாளர்கள். அந்த தெரு கால்பந்துதான், நெருக்கடியான சூழலிலும் பந்தை இழக்காமல் கையாளும் திறனை அவருக்குக் கற்றுக் கொடுத்தது.

லா மாசியாவில் கண்டெடுக்கப்பட்ட அதிசயம்

உள்ளூர் கிளப்பான சிஎப் டோரெட்டாவில்(CF Torreta) விளையாடிக் கொண்டிருந்தபோதே, யமாலின் திறமை பார்சிலோனா ஸ்கவுட்ஸின் கவனத்தை ஈர்த்தது. வெறும் ஏழு வயதில், உலகின் புகழ்பெற்ற கால்பந்து அகாடமிகளில் ஒன்றான லா மாசியாவில் இணைந்தார். லா மாசியாவில் அவரது முதல் பயிற்சிகளிலேயே, இந்தச் சிறுவன் சாதாரண வீரன் அல்ல என்பதை அனைவரும் உணரத் தொடங்கினர்.

மற்ற சிறுவர்கள் அனைவரும் பந்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். ஆனால், யமால் மட்டும் ஓடாமல் மாறாக பந்து வரப்போகும் காலியான இடத்தை முன்கூட்டியே கணித்து அதை நோக்கி சென்றார். முன்னாள் லா மாசியா இயக்குநர் ஜோர்டி ரௌரா பின்னர் நினைவுகூர்ந்தபோது, "அவருக்கு யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. அந்த வயதிலேயே மற்றவர்களை விட ஒரு கட்டம் முன்னால் சென்று யோசித்தார்" என்று கூறினார். யமாலுக்கு அது திறமை மட்டுமல்ல, கால்பந்தை மற்றவர்களை விட வித்தியாசமாகப் புரிந்துகொள்ளும் அறிவின் வெளிப்பாடாகவும் பார்க்கப்பட்டது.

இந்தச் சிறுவன் வித்தியாசமானவன்…

2022 -ல் 15 வயதில் பார்சிலோனா முதல் அணியுடன் பயிற்சி செய்யும் வாய்ப்பு யமாலுக்குக் கிடைத்தது. உலகப் புகழ்பெற்ற வீரர்களுடன் களமிறங்கிய அந்த சிறுவன் பதற்றப்படவில்லை. மாறாக, தனது ஆட்டத்தால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். ஒரு பயிற்சி ஆட்டத்தில் கோல் அடித்ததோடு, அணித்தோழருக்கு கோல் வாய்ப்பையும் உருவாக்கினார்.

சில நிமிடங்களே கடந்த நிலையில், பயிற்சியாளர் சாவி ஹெர்னாண்டஸ், தனது உதவியாளர்களை நோக்கி, "இந்தச் சிறுவன் வித்தியாசமானவன்" என்று கூறியதாக பின்னர் கிளப் நிர்வாகிகள் நினைவுகூர்ந்தனர். அந்த ஒரு வாக்கியம் பின்னர் நனவாகப் போகும் கணிப்பாகவும் மாறியது. அந்த பயிற்சிக்குப் பிறகு, பார்சிலோனாவின் எதிர்காலம் குறித்த பேச்சுகளில் லமின் யமாலின் பெயர் தவறாமல் இடம்பெறத் தொடங்கியது.

2023 ஏப்ரல் 29 அன்று ரியல் பெட்டிஸுக்கு எதிராக லா லிகாவில் மாற்று வீரராக களமிறங்கிய யமால், 15 வயதில் பார்சிலோனா முதல் அணிக்காக அறிமுகமான இளம் வீரர்களில் ஒருவராக வரலாறு படைத்தார். அந்த அறிமுகம் ஒரு தொடக்கம் மட்டுமே. அதன்பிறகு ஒவ்வொரு பருவத்திலும் புதிய உச்சங்களை எட்டிய அவர், லா லிகாவின் இளம் வயது கோல் சாதனை, சாம்பியன்ஸ் லீக்கில் இளம் வயது தொடக்க வீரர், இளம் வயது அசிஸ்ட் சாதனை என தொடர்ச்சியாக பல வரலாறுகளைப் படைத்தார்.

2025- 26ம் பருவத்தில் பயிற்சியாளர் ஹான்சி ஃப்ளிக்கின் கீழ் மேலும் முதிர்ச்சியடைந்த அவர், லா லிகாவில் 16 கோல்கள், 11 அசிஸ்ட்கள் பதிவு செய்து அணியின் தாக்குதல் ஆட்டத்தின் மையமாகவும் உருவெடுத்தார். அந்த அசாதாரண வளர்ச்சிக்கான அங்கீகாரமாக, கால்பந்து உலகின் கனவான பார்சிலோனாவின் ‘10’ஆம் எண் ஜெர்சியும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஸ்பெயினின் புதிய நம்பிக்கை

பார்சிலோனாவில் கிடைத்த வெற்றிகள், யமாலின் பயணத்தின் தொடக்கமே. ஸ்பெயின் தேசிய அணிக்குள் நுழைந்தபோதுதான், அவரது திறமை உலகம் முழுவதும் பேசப்படும் அளவுக்கு உயர்ந்தது. 2023 செப்டம்பர் 8 அன்று ஜார்ஜியாவுக்கு எதிரான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றுப் போட்டியில், 16 வயதில் ஸ்பெயின் அணிக்காக அறிமுகமானார். மாற்று வீரராக களமிறங்கிய சில நிமிடங்களிலேயே கோல் அடித்தும், ஸ்பெயின் தேசிய அணிக்காக விளையாடியதிலும், கோல் அடித்ததிலும் இளம் வீரர் என்ற இரட்டை சாதனையைப் படைத்தார்.

2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரில், யமாலின் பெயர் உலகக் கால்பந்தின் தலைப்புச் செய்தியாக மாறியது. நான்கு அசிஸ்ட்கள், பிரான்ஸுக்கு எதிரான அரையிறுதியில் உலகத் தரம் வாய்ந்த ஒரு அற்புத கோல், இறுதிப்போட்டியில் வயதை மீறிய ஆட்டம் என ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கியப் பங்கு வகித்தார்.

அந்த தொடரின் 'சிறந்த இளம் வீரர்' விருதை வென்றதோடு, 17 வயதில் ஒரு பெரிய சர்வதேச இறுதிப்போட்டியில் விளையாடி வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார். அன்று முதல், யமால் ஒரு திறமையான இளம் வீரராக மட்டுமல்லாமல் உலகக் கால்பந்தின் எதிர்கால முகம் என்ற அடையாளத்தையும் பெற்றார்.

2026 உலகக் கோப்பையிலும், ஸ்பெயினின் தாக்குதல் ஆட்டத்தின் இதயமாகவே யமாலே இருக்கிறார். அரையிறுதி வரை நடந்த அனைத்து போட்டிகளிலும் தொடக்க வீரராக களமிறங்கிய அவர், சவூதி அரேபியாவுக்கு எதிராக தனது முதல் உலகக் கோப்பை கோலையும் பதிவு செய்தார். புள்ளிவிவரங்களில் கோல்கள் குறைவாகத் தெரிந்தாலும், எதிரணியின் இரண்டு அல்லது மூன்று வீரர்களை தன் பக்கம் இழுத்து, அணித்தோழர்களுக்கு இடத்தை உருவாக்கும் அவரது திறன் ஸ்பெயினின் வெற்றிப் பயணத்தில் மிக முக்கியமான பங்காற்றியுள்ளது.

பெல்ஜியத்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியிலும் 90 நிமிடங்கள் விளையாடிய யமால், ஸ்பெயினை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற அணியின் முக்கிய அங்கமாக இருந்தார். அதுமட்டுமல்லாமல், சக வீரர் பாவ் குபர்சியுடன் இணைந்து, 1958 உலகக்கோப்பையில் பிரேசிலுக்காக பீலே மற்றும் ஜோசே அல்டாஃபினிக்குப் பிறகு, உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய முதல் டீனேஜ் ஜோடி என்ற வரலாற்றையும் உருவாக்கினார்.

'304'... மூன்று எண்களில் அடங்கிய வாழ்க்கை

யமாலின் கோல் கொண்டாட்டம் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. கோல் அடித்தவுடன் அவர் கைகளால் காட்டும் '304' என்ற எண்கள், அவர் வளர்ந்த ரோகஃபொண்டா பகுதியின் அஞ்சல் குறியீட்டைக் (08304) குறிக்கின்றன. உலகம் முழுவதும் புகழ் கிடைத்த பிறகும், “நான் எங்கிருந்து வந்தேன் என்பதை மறக்க மாட்டேன்” என்று வார்த்தைகளால் அல்லாமல், ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் தனது செய்கையால் நினைவூட்டுகிறார்.

யமாலின் வாழ்க்கையில் இன்னொரு சுவாரஸ்யமான தருணமும் கால்பந்து ரசிகர்களால் அடிக்கடி நினைவுகூரப்படுகிறது. 2007-ல், யுனிசெஃப் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்காக ஆறு மாதக் குழந்தையான யமாலை, அப்போது இளம் நட்சத்திரமாக இருந்த லியோனல் மெஸ்சி குளிக்க வைத்த புகைப்படம், யூரோ 2024-இன் போது மீண்டும் உலகம் முழுவதும் வைரலானது. பலர் அதை 'ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கால்பந்தின் தீபம் கையளிக்கப்பட்ட தருணம்' என்று வர்ணித்தனர். ஆனால், யமால் தனது பாதையைத் தானே உருவாக்க விரும்பினார். மெஸ்ஸியை மதிக்கிறார். ஆனாலும் தனது சிறுவயது முன்மாதிரி நெய்மர்தான் என்று அவர் பலமுறை கூறியிருக்கிறார்.

‘அழுத்தத்தைப் பற்றி அதிகம் சிந்தித்தால், சுதந்திரமாக விளையாட முடியாது. ரோகஃபொண்டாவில் நண்பர்களுடன் விளையாடுவதாகவே நான் நினைத்துக் கொள்கிறேன்’ என்று யமால் கூறியிருக்கிறார். அந்த ஒரு வாக்கியமே அவரது முழு ஆளுமையையும் விளக்குவதாக அமைகிறது. புகழ் அவரை மாற்றவில்லை, சாதனைகளும் அவரை அவசரப்படுத்தவில்லை, வயதும் அவரை கட்டுப்படுத்தவில்லை. மாறாக, ஒவ்வொரு போட்டியிலும் புதிய வரலாற்றை எழுத வேண்டும் என்ற அமைதியான வேட்கை மட்டுமே அவரை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது.

18 வயது என்பது பெரும்பாலான கால்பந்து வீரர்களுக்கு ஒரு தொடக்கமாக அமையும். ஆனால், லமின் யமாலுக்கு அது ஏற்கெனவே வரலாற்றை எழுதத் தொடங்கிய வயதாக அமைந்தது. ரோகஃபொண்டாவின் குறுகிய தெருக்களில் கால்பந்தைத் துரத்திய அந்தச் சிறுவன், இன்று உலகக் கோப்பை அரங்கில் ஒரு நாட்டின் கனவுகளைச் சுமந்து ஓடிக்கொண்டிருக்கிறார். அவர் ஏற்கெனவே படைத்த சாதனைகளும், ஏற்படுத்திய தாக்கமும், உலகக் கால்பந்தின் அடுத்த அத்தியாயத்தை எழுதப்போகும் தலைமுறையின் முகமாக அவரை அடையாளப்படுத்தியுள்ளன.

மெஸ்சி, ரொனால்டோ காலத்துக்குப் பிறகு உலகக் கால்பந்தின் அடுத்த அத்தியாயத்தை யார் எழுதப் போகிறார்கள் என்ற கேள்விக்கான பதிலில், தவிர்க்க முடியாத பெயராக ஏற்கெனவே மாறிவிட்டார் லமின் யமால். இனி அவர் எழுதப்போகும் வரலாற்றைத்தான் உலகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

SCROLL FOR NEXT