ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை வீழ்த்தியதை ஆக்ரோஷமாக கொண்டாடினார் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பவுலர் கைல் ஜேமிசன். இந்நிலையில், நடத்தை காரணமாக அவர் மீது ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று (மே 1) நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் 7 அணியை விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி அணி. 226 ரன் என்ற இலக்கை 19.1 ஓவர்களில் டெல்லி அணி எட்டியது. இதில் ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை வீழ்த்தியதை ஆக்ரோஷமாக கொண்டாடினார் டெல்லி வீரர் ஜேமிசன். அவரது செயலுக்கு சமூக வலைதள பயனர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆட்டத்தில் டாஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. அப்போதுதான் அந்த சம்பவம் நடைபெற்றது. ராஜஸ்தான் அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். மறுபக்கம் டெல்லி அணிக்காக ஸ்டார்க் மற்றும் ஜேமிசன் ஆகியோர் தொடக்க ஓவர்களை வீசினர்.
இதில் முதல் ஓவரில் ஜெய்ஸ்வால் விக்கெட்டை ஸ்டார்க் கைப்பற்றினார். அடுத்த ஓவரை ஜேமிசன் வீசினார். அதில் முதல் மூன்று பந்துகளை எதிர்கொண்ட ராஜஸ்தான் வீரர் துருவ் ஜூரேல், ஒரு சிங்கிள் மட்டுமே எடுத்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விளாசினார் வைபவ் சூர்யவன்ஷி. அதற்கடுத்த பந்தில் அவரது விக்கெட்டை வீழ்த்தினார் ஜேமிசன். அதன் பின்னர் வைபவ் சூர்யவன்ஷி அருகே சென்று விக்கெட் வீழ்த்தியதை ஆக்ரோஷமாக ஜேமிசன் கொண்டாடினார். அதுதான் சர்ச்சையானது.
இது ஐபிஎல் நன்னடத்தை விதி 2.5-ஐ மீறிய செயலாகும். இந்த விவகாரத்தில் அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதை ஆட்ட நடுவர் ராஜீவ் சேத் உறுதி செய்துள்ளார்.
“என் வாழ்நாளில் 15 வயது சிறுவன் ஒருவரை கண்டு நான் இவ்வளவு அஞ்சியதே இல்லை என்று நினைக்கிறேன். ஆனால், இந்தப் போட்டிக்குத் தயாராகும் வகையில் நாங்கள் நிச்சயமாகச் சில திட்டங்களை மேற்கொண்டிருந்தோம். அது பலனளித்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்று இந்த ஆட்டத்துக்கு பிறகு ஜேமிசன் தெரிவித்துள்ளார்.