விளையாட்டு

இலங்கைக்கு த்ரில் வெற்றி - குசல் மெண்டிஸ் அதிரடி சதம், துனித்தின் இடது கை ஸ்பின்!

இரா.முத்துக்குமார்

லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, இங்கிலாந்தை 16 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனால் இன்னும் ஒரு போட்டி மிதமிருக்க, இலங்கை தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி குசல் மெண்டிஸின் (121 ரன்கள், 100 பந்துகள், 14 ஃபோர், 3 சிக்ஸ்) காட்டடி சதம் மூலம் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 7 ஓவர்களில் 70 என்று அதிரடி தொடக்கம் கண்டு பிறகு, 20 ஓவர்களில் 143 ரன்கள் என்று வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், டாம் பாண்டன் (73), பென் டக்கெட் (67) ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் புரூக் 1 ரன்னில் வெளியேற, பிறகு ஜாஸ் பட்லர் (69), வில் ஜாக்ஸ் (52) இலக்கை நோக்கி முன்னேறினர். ஆனால் மதுஷங்கா, மலிங்கா முறையே ஜாஸ் பட்லர், ஜாக்ஸ் இருவரையும் வீழ்த்த இங்கிலாந்து 305/9 என்று முடிந்தது.

இடையில் ஜாஸ் பட்லர் 49 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 69 ரன்களில் இருந்தபோது இங்கிலாந்து 254/4 என்று வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது காயமடைந்து வெளியேறினார். பிறகு மீண்டும் கடைசியில் இறங்கித்தான் ஆட்டமிழந்தார். ஜாஸ் பட்லர் காயமடைந்தது இங்கிலாந்து தோல்விக்குப் பெரிய காரணமாக அமைந்தது.

இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜாஷ் டங், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், ரெனான் அகமது என்று அனைத்து பவுலர்களும் வகை தொகையில்லாமல் இலங்கை பேட்டர்களிடம் செம சாத்து வாங்கியதைத்தான் பார்க்க முடிந்தது. இதில் கஸ் அட்கின்சந்தான் கொஞ்சம் பரவாயில்லை ரகம். ஆனால் அவரும் 10 ஒவர்களில் 55 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மற்ற பவுலர்கள் எல்லாருமே 6 ரன்களுக்கும் மேல் வாரி வழங்கியுள்ளனர்.

இலங்கை தரப்பில் அஷிதா பெர்னாண்டோ, மதுஷங்கா ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் சாத்து வாங்கினர். ஆனால் சரித அசலங்கா 6 ஓவர் 29 ரன்கள் என்று டைட்டாக வீசினார். ஈசான் மலிங்கா 9 ஓவர் 50 ரன்கள் 2 விக்கெட். துனித் வெல்லலகே 49 ரன்களையே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குறிப்பாக அதிரடி தொடக்க வீரர்களான டாம் பாண்ட்டன், பென் டக்கெட், ஹாரி புரூக் ஆகியோரை வீழ்த்தியதால்தான் இலங்கை வெற்றி சாத்தியமானது. ஆட்ட நாயகனாக குசல் மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT