கோலி
இந்தூரில் நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்று முதல் முறையாக இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. கவுதம் கம்பீர் பயிற்சியின் கீழ் அவரது தாறுமாறான சோதனைகளின் கீழ் நியூஸிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி இப்போது ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது.
சுவாரஸ்யமான புள்ளி விவரங்கள்: கோலி 35 மைதானங்களில் தன் ஒரு நாள் சதங்களை எடுத்துள்ளார். இதில் இந்தூர் சதம் கடைசியாக சேர்ந்தது. இதிலும் சச்சின் டெண்டுல்கரை கடந்து விட்டார் கோலி. சச்சின் 34 மைதானங்களில் சதம் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்செல் இந்தத் தொடரில் எடுத்த 352 ரன்கள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு தனிப்பட்ட வீரர் எடுக்கும் 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னர் 2016-ல் பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அஸம் 360 ரன்களையும், ஷுப்மன் கில் 2023-ல் நியூஸிலாந்துக்கு எதிராக 360 ரன்களையும் எடுத்துள்ளனர்.
மிட்செல் எடுத்த 352 ரன்கள் இருதரப்பு ஒருநாள் தொடர்களில் நியூஸிலாந்து வீரர் ஒருவரின் 4-வது அதிகபட்ச மொத்த ரன் எண்ணிக்கையாகும். 2013-ல் மார்ட்டின் கப்தில் இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த 330 ரன்களை இந்தத் தொடரில் கடந்தார் மிட்செல்.
மிட்செல் 4 முறை 130+ ஸ்கோரை எடுத்துள்ளார். இந்த நான்கும் இந்தியாவுக்கு எதிராக என்பது ஒரு சாதனை. சனத் ஜெயசூரியா இந்தியாவுக்கு எதிராக 3 சதங்களை விளாசியுள்ளார். ஆனால், இதே போல் 130+ ஸ்கோர்களை சச்சின் டெண்டுல்கரும், ரோஹித் சர்மாவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 முறை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு எதிராக விராட் கோலி 4 முறை 130+ ஸ்கோர் எடுத்துள்ளார்.
டேரில் மிட்செல் இந்தியாவுக்கு எதிராக எடுத்த 4 சதங்களும் இந்தியாவில் எடுக்கப்பட்டது. ஏ.பி.டிவில்லியர்ஸ் மட்டும்தான் இதில் 5 சதங்களை இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் எடுத்து முன்னிலை வகிக்கிறார். மேலும், இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் 5 முறை 50+ ஸ்கோரை தொடர்ச்சியாக எடுத்த வகையிலும் மிட்செல் இந்திய பவுலிங்கை பதம்பார்த்துள்ளார்.
மேலும், மிட்செல் தன் 9-வது ஒருநாள் சதத்தை 54-வது இன்னிங்ஸில் எடுத்துள்ளார். இமாம் உல் ஹக் 48 இன்னிங்ஸ்களிலும், ஹஷிம் ஆம்லா 52 இன்னிங்ஸ்களிலும், குவிண்டன் டி காக் 53 இன்னிங்ஸ்களிலும், 9 ஒருநாள் சர்வதேச சதங்களை எடுத்துள்ளனர்.
நியூஸிலாந்துக்கு எதிராக விராட் கோலி 7 சதங்களை எடுத்துள்ளார். ரிக்கி பாண்டிங், சேவாக் இருவரும் நியூஸிலாந்துக்கு எதிராக 6 சதங்களை எடுத்துள்ளனர்.
ரோஹித் சர்மாவின் இந்தத் தொடரின் சராசரி 20.33. இந்தியாவில் ரோஹித் சர்மாவின் ஆகக்குறைந்த சராசரி இதுவே.
கோலி நேற்று எடுத்த 124 ரன்கள் சேஸிங்கின் போது இந்திய அணி தோல்வியுற்ற போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.
கிளென் பிலிப்ஸ் - டேரில் மிட்செல் எடுத்த 219 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஒருநாள் போட்டிகளில் எந்த ஒரு விக்கெட்டுக்குமான 2-வது அதிகபட்ச கூட்டணி ரன்களாகும். 4-வது விக்கெட்டுக்காக 2022 ஒருநாள் தொடரில் கேன் வில்லியம்சனும் டாம் லாதமும் இணைந்து சேர்த்த 221 தான் அதிகபட்சமாகும்.
இந்தியாவில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்றதன் மூலம் 13 நாடுகளில் இருதரப்பு தொடர்களை நியூஸிலாந்து வென்று சாதனை படைத்துள்ளது.