புதுடெல்லி: டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணிக்காக வரும் சீசனில் மீண்டும் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் களமிறங்கவுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணியில் இடம்பிடித்திருந்த கே.எல்.ராகுல் 4-வது வீரராக களமிறங்கி விளையாடினார்.
கடந்த சீசனில் 13 ஆட்டங்களில் விளையாடிய அவர் 539 ரன்கள் குவித்து அந்த அணியில் அதிக ரன்கள் குவித்த வீரராக மாறினார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் அவர் சதமும் விளாசினார்.
கடந்த சீசனில் 4-வது வீரராக ராகுல் களமிறங்கிய நிலையில், தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாத காரணத்தால் பல போட்டிகளில் டெல்லி அணி தோல்வி காண நேரிட்டது. இதையடுத்து மீண்டும் ராகுலை தொடக்க வீரராக களமிறக்க டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அணியின் கேப்டனாக அக்சர் படேல் செயல்படுவார் என்றும் கே.எல்.ராகுலுடன் பென் டக்கெட் அல்லது பதும் நிசங்கா தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது என்றும் டெல்லி கேபிடல்ஸ் அணி வட்டாரங்கள் தெரிவித்தன.