புதுடெல்லி: ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 150 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆரம்பம் முதலே பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்த ராகுல், வெறும் 67 பந்துகளில் 152 ரன்கள் குவித்தார். இதில் 16 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். 226 என்ற இமாலய ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய அவர், தனது ஐபிஎல் பயணத்தின் அதிவேக சதத்தை (47 பந்துகளில்) இந்தப் போட்டியில் பதிவு செய்தார்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கிறிஸ் கெய்ல் (175) மற்றும் பிரண்டன் மெக்கல்லம் (158) ஆகிய இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே 150 ரன்களைக் கடந்திருந்தனர். தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ள மூன்றாவது வீரர் மற்றும் முதல் இந்தியர் என்ற சாதனையை ராகுல் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் இந்திய வீரர்களில் அபிஷேக் சர்மா (141) மற்றும் ரிஷப் பன்ட் (128) ஆகியோரின் சாதனைகளை ராகுல் முறியடித்துள்ளார்.
ராகுலுடன் இணைந்து அபாரமாக ஆடிய நிதிஷ் ராணா 91 ரன்கள் குவித்தார். இவர்களின் 220 ரன்கள் பார்ட்னர்ஷிப் உதவியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 264 என்ற மெகா இலக்கை எட்டியது. எனினும் டெல்லிக்கு எதிராக ஆடிய பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.