மலப்புரம்: பணம் பெற்றுக்கொண்டு கேரளாவுக்கு வந்து விளையாடாமல் அர்ஜெண்டினா கால்பந்து அணி ஏமாற்றிவிட்டதாக கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் வி.அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.
அர்ஜெண்டினா கால்பந்து அணியும் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸியும் கடந்த மார்ச் மாதம் கேரளாவுக்கு வருகை தருவார்கள் என கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் தெரிவித்திருந்தார். ஆனால் திட்டமிட்டபடி அர்ஜெண்டினா அணி கடந்த மாதம் கேரளா வருகை தரவில்லை.
இந்நிலையில் அப்துரஹிமான் நேற்று தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அர்ஜெண்டினா கால்பந்து அணியும், லயோனல் மெஸ்ஸியும் கேரளாவுக்கு வந்து ஒரு போட்டியில் விளையாட வேண்டும் என்று நான் மனதார விரும்பினேன். மெஸ்சி மற்றும் அர்ஜெண்டினா அணியை வரவழைக்க பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினேன்.
அர்ஜெண்டினா அணிக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.250 கோடியை திரட்டுவதற்கு ஸ்பான்சர்களை ஏற்பாடு செய்வது கடினமாக இருந்தது. ஆனால், அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, அர்ஜெண்டினா கால்பந்து அணி எங்களை ஏமாற்றிவிட்டது. அவர்களிடம் இருந்து இப்படி ஒரு துரோகத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, வராமல் போனது மிகப்பெரிய ஏமாற்றம்.
இது குறித்து நான் விசாரித்தபோது, அர்ஜெண்டினா அணி இதேபோன்று 5 நாடுகளை ஏமாற்றி இருப்பதை கண்டறிந்தேன். அவர்கள் அந்த நாடுகளில் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு விளையாடச் செல்லவில்லை. இதுதொடர்பாக அர்ஜெண்டினா கால்பந்து அணிக்கு எதிராக வழக்கைப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் அவர்கள் நமக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இது கேரளாவில் உள்ள கால்பந்து ரசிகர்களைப் பெரும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. இந்த ஏமாற்றத்தை யாரிடம் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.