கேன் வில்லியம்சன்
சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.
35 வயதான அவர், கடந்த 2010-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். நியூஸிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராக வில்லியம்சன் அறியப்படுகிறார். 2021-ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி, 2019-ல் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி மற்றும் 2021-ல் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி உள்ளிட்டவற்றில் நியூஸிலாந்து அணியை வழிநடத்தி உள்ளார்.
இப்போது இங்கிலாந்து பயணித்துள்ள நியூஸிலாந்து அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். அண்மையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வில்லியம்சன் விளையாடி இருந்தார். இந்த தொடரில் ஓவல் மற்றும் டிரெண்ட் பிரிட்ஜ் என இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், தனது ஓய்வு முடிவை வில்லியம்சன் அறிவித்துள்ளார்.
“கடந்த சில காலமாக இது குறித்து நான் எண்ணியது உண்டு. ஆனால், கடந்த சில நாட்களாக இதுதான் சரியான நேரம் என கருதுகிறேன். சர்வதேச கிரிக்கெட் மீது எனக்கு அதிக ஆர்வம் உண்டு. நியூஸிலாந்து அணிக்காக நான் விளையாடிய அனைத்து ஆட்டத்திலும் எனது ஆட்டத்திறன் அனைத்தையும் நான் கொடுத்துள்ளேன். அதை எண்ணி பெருமை கொள்கிறேன்.
நியூஸிலாந்து அணியின் வருங்காலம் பயணத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். அதிகளவு திறன் கொண்ட வீரர்கள் உள்ளனர். இந்த அணி எனது நெஞ்சுக்கு நெருக்கமானது” என வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,515 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 33 சதங்களை பதிவு செய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 7,256 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 2,575 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 54, ஒருநாள் கிரிக்கெட்டில் 48 என்ற சராசரியை கொண்டுள்ளார்.