சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை தொடங்கிய சிஎஸ்கே அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரை வீசிய முகமது சிராஜ் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். காகிசோ ரபாடா வீசிய அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சன் 2 பவுண்டரிகளை விரட்டினார். இதனால் இந்த ஓவரில் 2 பவுண்டரிகள் விரட்டப்பட்டன. முகமது சிராஜ் வீசிய 3-வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகளை விரட்டினார்.
காகிசோ ரபாடா வீசிய 4-வது ஓவரின் 3-வது பந்தில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே ஷாட் லெந்தில் வீசிய பந்தை சாம்சன் அடிக்க முயன்ற போது பந்து மட்டை விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் ஆனது. 15 பந்துகளை சந்தித்த சஞ்சு சாம்சன் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் சேர்த்தார்.
முதல் விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன், கெய்க்வாட் ஜோடி 21 ரன்கள் சேர்த்தது. இதையடுதது களமிறங்கிய உர்வில் படேல் அவசரகதியில் விளையாடினார். ஆஃ ப் ஸ்டெம்புக்கு வெளியே ரபாடா வீசிய பந்தை உர்வில் படேல் விளாச முயன்ற போது மிட் ஆன் திசையில் நின்ற ஜேசன் ஹோல்டரிடம் கேட்ச் ஆனது. உர்வில் படேல் 3 பந்துகளில் 4 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் களமிறங்கிய சர்ஃபராஸ் கான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். முகமது சிராஜ் வீசிய பந்தை சர்ஃபராஸ் கான் ஸ்கொயர் லெக் திசையில் நோக்கி சிக்ஸர் விளாசுவதற்காக மட்டையை சுழற்றினார். ஆனால் பந்து அவருக்கு பின்புறம் அதிக உயரத்தில் சென்றபடி ஜாஸ் பட்லரிடம் கேட்ச் ஆனது.
இதனால் சிஎஸ்கே அணி 4.4 ஓவர்களில் 26 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து டெவால்ட் பிரேவிஸ் களமிறங்க பவர்பிளேவில் சிஎஸ்கே அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 28 ரன்கள் சேர்த்தது. நிதானமாக விளையாடிய டெவால்ட் பிரேவிஸ் 9 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் மானவ் சுதார் வீசிய சுழற் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
மானவ் சுதார் பந்தை டெவால்ட் பிரேவிஸ் லாங் ஆன் திசையை நோக்கி சிக்ஸருக்கு விளாச முயன்றார். ஆனால் பந்து சரியாக மட்டையில் சிக்காத நிலையில் கவர் திசையில் ஷுப்மன் கில்லிடம் கேட்ச் ஆனது. அப்போது ஸ்கோர் 8.2 ஓவர்களில் 37 ஆக இருந்தது. இதையடுத்து ஷிவம் துபே களமிறங்க 10 ஓவர்களில் சிஎஸ்கே அணி 43 ரன்கள் சேர்த்தது. அர்ஷத் கான் வீசிய 13-வது ஓவரில் டீப் மிட் விக்கெட் மற்றும் டீப் ஸ்கொயர் லெக் திசையில் தலா ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு அசத்தினார் ருதுராஜ் கெய்க்வாட்.
தொடர்ந்து ஜேசன் ஹோல்டர் வீசிய 14-வது ஓவரின் முதல் பந்தை லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ருதுராஜ் கெய்க்வாட். ரஷித் கான் வீசிய 15-வது ஓவரில் ஷிவம் துபே தலா ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். ருதுராஜ் கெய்க்வாட் தனது பங்குக்கு ஒரு பவுண்டரி விரட்ட இந்த ஓவரில் 21 ரன்கள் சேர்க்கப்பட்டன. சீராக ரன்கள் சேர்த்த ஷிவம் துபே 17 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷத் கான் பந்தில் போல்டானார்.
இதையடுத்து களமிறங்கிய கார்த்திக் சர்மா மட்டையை சுழற்றினார். மறுபுறம் நிதானாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 49 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். முகமது சிராஜ் வீசிய 17-வது ஓவரின் 2-வது பந்தை ருதுராஜ் கெய்க்வாட் மிட்விக்கெட் திசையில் சிக்ஸர் விளாசினார்.காகிசோ ரபாடா வீசிய 18-வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகள் அடித்த கார்த்திக் சர்மா இந்த ஓவரின் 5-வது பந்தில் தேர்டுமேன் திசையில் நின்ற ஜேசன் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கார்த்திக் சர்மா 9 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய ஜேமி ஓவர்டன் அர்ஷத் கான் வீசிய 19-வது ஓவரில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசினார். ஆனால் இதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ஜேமி ஓவர்டன் 6 பந்துகளில், 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 18 ரன்கள் சேர்த்தார்.
மானவ் சுதார் வீசிய கடைசி ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் 3 பவுண்டரிகளை விரட்ட 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் அணி தரப்பில் காகிசோ ரபாடா 3, அர்ஷத் கான் 2 விக்கெட்களை வீழ்த்தினர். மானவ் சுதார், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
159 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரான சாய் சுதர்சன் 46 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் விளாசினார். ஜாஸ் பட்லர் 30 பந்துகளில், 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 39 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் ஒரு ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முன்னதாக ஷுப்மன் கில் 23 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் நூர் அகமது பந்தில் ஸ்டெம்பிங்க் ஆனார். 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் டைட்ன்ஸ் அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. ஆட்ட நாயகனாக காகிசோ ரபாடா தேர்வானார். சிஎஸ்கே அணிக்கு இது 5-வது தோல்வியாக அமைந்தது. அந்த அணி 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
31 ஆயிரம் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரில் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை காண்பதற்காக மைதானத்தில் 31,506 ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
பவர்பிளேவில் குறைவான ரன்கள்
ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி பவர்பிளேவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 28 ரன்கள் சேர்த்தது. இது நடப்பு சீசனில் பவர்பிளேவில் ஓர் அணி எடுத்த 2-வது குறைந்தபட்ச ரன்கள் இதுவாகும். இதற்கு முன்னர் லக்னோ அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி பவர்பிளேவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.
சஞ்சு சாம்சன் 5 ஆயிரம் ரன்கள்
ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர், 3 ரன்களை எடுத்திருந்த போது ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்களை கடந்தார். 185 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல் சாதனையை அவர் எட்டியுள்ளார்.
5 ஆயிரம் ரன்களை சஞ்சு சாம்சன் 3,555 பந்துகளில் எடுத்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் 5 ஆயிரம் ரன்களை குவித்தவர்களின் பட்டியலில் சாம்சன் 3-வது இடத்தை பிடித்தார். இந்த வகையில் டி வில்லியர்ஸ் (3,288 பந்துகள்) முதலிடத்திலும், டேவிட் வார்னர் (3,554) 2-வது இடத்திலும் உள்ளனர்.
சிக்ஸரில் சதம்
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 4 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்காக 100 சிக்ஸர்களை விளாசியவர்களின் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பிடித்தார். இந்த வகை சாதனையில் தோனி 234 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரெய்னா (180) 2-வது இடத்திலும், ஷிவம் துபே (105) 3-வது இடத்திலும் உள்ளனர். இவர்களுடன் ருதுராஜ் கெய்க்வாட் 101 சிக்ஸர்களுடன் 4-வது வீரராக இணைந்துள்ளார்.
மந்தமான அரை சதம்
குஜராத் அணிக்கு எதிராக நேற் று நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 49 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் அவர், சிஎஸ்கே அணிக்காக மந்தமாக விளையாடி அரை சதம் அடித்தவர்களின் பட்டியலில் 6-வது இடத்தை பிடித்தார். இந்த வகையில் பஞ்சாப் அணிக்கு எதிராக 2010-ல் பார்த்தீவ் படேல் 53 பந்துகளில் அரை சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
8 ஓவர்களில் 108 குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 12 ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சிஎஸ்கே அணி 100 ரன்களை எட்டுவதே கடினம் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசி 8 ஓவர்களில் 108 ரன்கள் குவித்தது. ஜேமி ஓவர்டன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இறுதிக்கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடிதால் சற்று கவுரவமான ஸ்கோரை கொடுக்க முடிந்தது.
ஸ்கோர் போர்டு
சிஎஸ்கே
சஞ்சு சாம்சன் (சி) பட்லர் (கே) ரபாடா 11
ருதுராஜ் கெய்க்வாட் (அவுட் இல்லை) 74
உர்வில் படேல் (சி) ஹோல்டர் (பி) ராபாடா 4
சர்ஃபராஸ்கான் (சி) பட்லர் (கே) சிராஜ் 0
டெவால்ட் பிரேவிஸ் (சி) ஷுப்மன் கில் (பி) சுதார் 2
ஷிவம் துபே (பி) அர்ஷத் கான் 22
கார்த்திக் சர்மா (சி) ஹோல்டர் (பி) ரபாடா 15
ஜேமி ஓவர்டன் (சி) ஷாருக்கான் (பி) அர்ஷத் கான் 18
அகீல் ஹோசைன் (அவுட் இல்லை) 0
உதிரிகள் 12
மொத்தம் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 158
விக்கெட் வீழ்ச்சி: 1-21 (சஞ்சு சாம்சன்), 2-25 (உர்வில் படேல்), 3-26 (சர்ஃபராஸ்கான்), 4-37 (பிரேவிஸ்), 5-96 (ஷிவம் துபே), 6-122 (கார்த்திக் சர்மா), 7-143 (ஜேமி ஓவர்டன்)
பந்துவீச்சு
முகமது சிராஜ் 4 0 23 1
காகிசோ ரபாடா 4 0 25 3
மானவ் சுதார் 3 0 22 1
ஜேசன் ஹோல்டர் 4 0 22 0
அர்ஷத் கான் 4 0 23 2
ரஷித் கான் 1 0 21 0
குஜராத் டைட்டன்ஸ்
சாய் சுதர்ஷன் (சி) பிரேவிஸ் (பி) அகீல் ஹொசைன் 87
ஷுப்மன் கில் (ஸ்டம்பிங்) சாம்சன் (பி) நூர் அகமது 33
ஜாஸ் பட்லர் (அவுட் இல்லை) 39
வாஷிங்டன் சுந்தர் (அவுட் இல்லை) 1
உதிரிகள் 2
மொத்தம் 16.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 162
விக்கெட் வீழ்ச்சி: 58-1(ஷுப்மன் கில்), 155-2 (சாய் சுதர்ஷன்)
பந்துவீச்சு
அகீல் ஹோசைன் 3.4-0-46-1
அன்ஷுல் கம்போஜ் 3-0-16-0
ஜேமி ஓவர்டன் 2-0-28-0
குர்ஜப்நீத் சிங் 3-0-36-0
நூர் அகமது 4-0-29-1
ஷிவம் துபே 1-0-7-0