ஜஸ்டின் கிரேவ்ஸ்
கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்றைய தினம் கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய தினமாக அமைந்தது. 531 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து 4-வது இன்னிங்சில் மே.இ.தீவுகள் 457 ரன்களைக் குவித்து வரலாற்று உலக சாதனை நிகழ்த்தியதோடு மாரத்தான் விரட்டலில் போட்டியை வெல்ல முடியாவிட்டாலும் டிரா செய்தது. மே.இ.தீவுகளின் ஜஸ்டின் கிரேவ்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த 4வது இன்னிங்சை ஆடி 202 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
முன்னதாக ஷேய் ஹோப் அதியற்புதமாக ஆடி 140 ரன்களை எடுத்ததும் பெரிய பங்களிப்பாக அமைந்தது. 72/4 என்ற நிலையிலிருந்து ஷேய் ஹோப், ஜஸ்டின் கிரீவ்ஸ் இருவரும் சேர்ந்து 196 ரன்களைச் சேர்த்ததும் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் ஆக அமைந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 457/6 என்று போட்டியை டிரா செய்தது. ஜஸ்டின் க்ரேவ்ஸுடன் உறுதுணையாக நின்று ஆடிய கிமார் ரோச் சுமார் 233 பந்துகளைச் சந்தித்து 8 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். ஜஸ்டின்கிரேவ்ஸ் 388 பந்துகளைச் சந்தித்து 19 பவுண்டரிகளுடன் 202 நாட் அவுட்.
இருவரும் சேர்ந்து சுமார் 409 பந்துகளைச் சந்தித்து 180 ரன்களை முறியடிக்க முடியாமல் 7வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக உலக சாதனை கூட்டணி அமைத்து டெஸ்ட்டை வெற்றிகரமாக டிரா செய்தனர். இது டிரா ஆனாலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது ஒரு தார்மிக வெற்றியே.
நியூஸிலாந்து அணி தரப்பில் நேதன் ஸ்மித், மேட் ஹென்றி காயம் காரணமாக பவுலிங் செய்ய முடியாமல் போனது ஒரு பெரும் பின்னடைவு, அதே வேளையில் நடுவர் தீர்ப்புகள் ஒன்றிரண்டு மே.இ.தீவுகளுக்குச் சாதகமாக அமைந்தது.
மூன்றாவது நடுவரை ரெஃபரல் செய்யும் 3 வாய்ப்பையும் நியூஸிலாந்து தீர்த்து விட்டதால், இருமுறை கிளீன் அவுட் நாட் அவுட் என்று களநடுவரால் தீர்ப்பாளிக்கப்பட்டும் மேல்முறையீடு செய்ய முடியாமல் போனது. கிமார் ரோச் ஒருமுறை கிளீன் எட்ஜ் செய்தார், விக்கெட் கீப்பர் கேட்ச் எடுத்தும் களநடுவர் நாட் அவுட் என்றார். இன்னொருமுறை பிளம்ப் எல்.பி. ஹிட்டிங் என்று ரீப்ளேயில் காட்டியது, ஆனால் மேல்முறையீடு வாய்ப்பில்லாததால் அவுட் இல்லை, இந்த இரண்டு அவுட்களும் கொடுக்கப்பட்டிருந்தால் ஒருவேளை நியூஸிலாந்து வெற்றி பெற்றிருக்கக் கூடும்.
ஜஸ்டின் கிரேவ்ஸ் 4வது இன்னிங்சில் இரட்டைச் சதம் அடித்த 4வது மே.இ.தீவுகள் வீரராகத் திகழ்ந்தார். மொத்தத்தில் 4வது இன்னிங்ஸ் இரட்டைச் சதம் அடித்த 7வது வீரர். ஹெட்லி, கைல் மேயர்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், இப்போது ஜஸ்டின் கிரேவ்ஸ். உலக அளவில் கவாஸ்கர், எட்ரிச், நேதன் ஆஸ்ட்ல் ஆகியோர் 4வது இன்னிங்ஸில் இரட்டைச் சதம் எடுத்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் மொத்தம் 163.3 ஓவர்களை ஆடியுள்ளது, அதாவது 694 நிமிடங்கள் ஆடி டிரா செய்துள்ளது. ஆட்ட நாயகனாக ஜஸ்டின் கிரேவ்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிமார் ரோச் இந்தப் போட்டியில் 2வது இன்னிங்ஸ் 5 விக்கெட்டுகளுடன் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு தொடர்ச்சியாக 50-க்கும் கூடுதலான டாட்பால்களுடன் 4வது இன்னிங்சில் 53 ரன்களை எடுத்து உறுதுணையாக நின்று வரலாற்று டிரா செய்ய உதவினார்.
1939-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து 696 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து 654/5 என்று டிரா செய்தது. ஆனால் அது டெஸ்ட் வரலாற்றில் வருமா என்று தெரியவில்லை. இப்போது டெஸ்ட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிதான் 457 ரன்கள் என்ற அதிகபட்ச ரன்களை எடுத்து டிரா செய்துள்ளது. இந்திய அணி ஒருமுறை ஆஸ்திரேலியாவில் 490 ரன்கள் இலக்கை எதிர்த்து 445 ரன்களை எடுத்து தோல்வி தழுவியதும் குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து தன் சொந்த மண்ணில் இங்கிலாந்தின் 487 ரன்கள் இலக்கை எதிர்த்து 451 எடுத்துள்ளது. தென் ஆப்பிரிகா அணி இந்தியாவுக்கு எதிராக 4வது இன்னிங்சில் 450/7 என்று டிரா செய்தது. 2016-ல் பாகிஸ்தான் 490 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து மராத்தான் சேசிங்கில் 450 ரன்கள் எடுத்து தோற்றுள்ளது. இதே பாகிஸ்தான் கராச்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 443/7 என்று டிரா செய்துள்ளது. 4வது இன்னிங்ஸ் 400க்கும் மேற்பட்ட இலக்கில் வெற்றி பெற்ற அதிகபட்ச இலக்கு 418, இதைச் செய்ததும் மே.இ.தீவுகள்தான்.. அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.
தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் ஒருமுறை 414/4 என்று வெற்றி பெற்றுள்ளது. மொத்தத்தில் அதிகபட்ச 4வது இன்னிங்ஸ் வெற்றி இலக்கை எடுத்து வென்றதிலும் மே.இ.தீவுகள்தான் முதலில் உள்ளது, இப்போது டிராவிலும் 4வது இன்னிங்சில் வரலாறு படைத்துள்ளது. இந்த டிரா என்னும் தார்மிக வெற்றி மே.இ.தீவுகள் கிரிக்கெட் அத்தியாயத்தின் திருப்பு முனையாக அமைந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.