புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணி புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரது வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்களை பறிகொடுத்தது. அறிமுக வீரரான சஹில் பராக் ரன் ஏதும் எடுக்காமல் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தில் போல்டானார்.
ஜோஷ் ஹேசில்வுட் வீசிய 2-வது ஓவரில் கே.எல்.ராகுல் (1), சமீர் ரிஷ்வி (0) ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவிடம் பிடிகொடுத்து நடையை கட்டினர். இதையடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்தில் முதல் சிலிப் திசையில் நின்ற தேவ்தத் படிக்கலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் கேப்டன் அக்சர் படேல் ரன் ஏதும் எடுக்காமலும், நித்திஷ் ராணா ஒரு ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். 3.5 ஓவர்களில் 8 ரன்களுக்கு 6 விக்கெட்களை பறிகொடுத்த நிலையில் டேவிட் மில்லர், அபிஷேக் போரெல் ஜோடி போராடியது. டேவிட் மில்லர் 18 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் ரஷிக் சலாம் பந்தை விளாச முயன்ற போது ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் ஆனது.
இதையடுத்து களமிறங்கிய கைல் ஜேமிசன் 13 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்த நிலையில் கிருணல் பாண்டியா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அவரைத் தொடர்ந்து குல்தீப் யாதவ் 3 ரன்களில் சுயாஷ் சர்மா பந்தில் போல்டானார். சீராக ரன்கள் சேர்த்த அபிஷேக் போரெல் 33 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஸ்டெம்புகள் சிதற போல்டானார்.
இறுதியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 16.3 ஓவர்களில் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆர்சிபி அணி தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 3.3 ஓவர்களை வீசி 12 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். புவனேஷ்வர் குமார் 3 ஓவர்களை வீசி 5 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். ரஷிக் சலாம், சுயாஷ் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 76 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்சிபி அணி 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 15 பந்துகளில், ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 23 ரன்களும், தேவ்தத் படிக்கல் 13 பந்துகளில், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 34 ரன்களும் விளாசினர். முன்னதாக ஜேக்கப் பெத்தேல் 11 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 20 ரன்கள் சேர்த்த நிலையில் ஜேமிசன் பந்தில் ஆட்டமிழந்தார்.
9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள ஆர்சிபி அணி 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் தொடர்கிறது. டெல்லி அணிக்கு இது 5-வது தோல்வியாக அமைந்தது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் தொடர்கிறது.