பிரிஸ்பனில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டியான ஆஷஸ் 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 334 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஜோ ரூட் இதுவரை ஆஸ்திரேலியாவில் சதம் எடுத்ததில்லை என்ற வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து 138 ரன்கள் எடுத்து கடைசி வரை நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஒரு அபாரமான பந்து வீச்சில் 75 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
நேற்று முதல் நாள் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே மீண்டும் மிட்செல் ஸ்டார்க் அதியற்புதமான ஸ்விங் பந்தில் பென் டக்கெட்டை வெளியேற்றினார். ஜாக் கிராலி நேற்று அருமையாக ஆடி 93 பந்துகளில் 76 ரன்களை எடுத்தார். அவர் நேசர் பந்தை கட் ஆட முயன்று அண்டர் எட்ஜ் ஆகி வெளியேறினார். ஆலி போப் ஆஃப் ஸ்டம்புக்கு சற்றே நெருக்கமாக வந்த பந்தை ஆஃப் திசையில் அடிக்க முயன்று மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார், இவரும் டக் அவுட். ஒரு கட்டத்தில் 5/2 என்று இங்கிலாந்து போராடியது.
ஆனால் ஜோ ரூட் அட்டகாசமான ஒரு இன்னிங்சை ஆடினார். ஆனால் இறங்கியவுடன் ஸ்டார்க் பந்தை எட்ஜ் செய்த போது லபுஷேன் ஒரு அட்டகாசமான கேட்சிற்கு முயன்றார், ஆனால் பந்து ஏமாற்றி பவுண்டரிக்குச் சென்றது. அப்போது முதல் ரூட் ஒரு தவறும் செய்யவில்லை.
ரூட் லெக் திசையில் தட்டி விட்டு சதம் கண்டார். சதம் எடுத்தவுடன் அவரது செய்கை மிகவும் தரமாக இருந்தது, ‘இதானப்பா கேட்டீங்க, ஆஸ்திரேலியாவில் செஞ்சுரி, இவ்வளவுதானே..’ என்பது போல் செய்கை செய்தார். 22 வயதில் பிரிஸ்பனில் ஆஷஸ் பகைமைக்கு அறிமுகமானார். இன்று தன் 40வது டெஸ்ட் சதத்தை தன் முதல் ஆஷஸ் ஆஸி. சதமாக மாற்றி இங்கிலாந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்தார். அவருக்கும் இது ஒரு சொந்த மைல்ஸ்டோன் தான்.
ஹாரி புரூக், ட்ராவிஸ் ஹெட் போல் ஆட முயன்றார் 4 அதிரடி பவுண்டரிகளை ஆக்ரோஷமாக எடுத்தார், ஆனால் கடைசியில் பாய்காட் சொல்லும் ‘ஸ்டுபிட் ஷாட்’ ஆடி அவுட் ஆனார். ஆஃப் ஸ்டம்புக்கு மிகவும் வெளியே சென்ற பந்தை ட்ரைவ் ஆட முயன்று ஸ்லிப்பில் ஸ்மித் கையில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
பென் ஸ்டோக்ஸ் ஆகப்பொறுமையாக ஆடி 19 ரன்கள் எடுத்தார். ஆனால் தேவையில்லாத ஒரு சிங்கிளுக்கு ஆசைப்பட்டு ஜாஷ் இங்லிஷின் அற்புத த்ரோவுக்கு ரன் அவுட் ஆகி பரிதாபமாக வெளியேறினார்.
விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்திற்கு ஸ்காட் போலண்ட் அருமையான ஒரு இன்ஸ்விங்கரை வீச ஸ்டம்புகளின் மேல் இருந்த பைல்கள் தெறித்தன. டக் அவுட் ஆனார். வில் ஜாக்ஸ் இவர் நல்ல திறமை காட்டினார். 19 ரன்கள் எடுத்து ஹாரி புரூக் போலவே வெளியே சென்ற ஸ்டார்க் பந்தை துரத்தி எட்ஜ் ஆகி வெளியேறினார்.
கஸ் அட்கின்சன் ஸ்டார்க் பந்தை தூக்கி அடிக்க பந்து விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் 30-40 யார்டுகள்சென்றது, அதை கீப்பர் கேரி மற்றும் லபுஷேன் மேலே பார்த்தபடியே விரட்டிச் சென்றனர், கடைசியில் இருவருமே டைவ் அடித்தனர், ஆனால் கேரி அட்டகாசமாக பிடித்தார், ஸ்டன்னிங் கேட்ச் இது.
பிரைடன் கார்ஸ் இங்கிலாந்தின் 4வது டக் ஆகி ஸ்டார்க்கின் 6வது விக்கெட்டாக வெளியேறினார். ஆனால் ஜோப்ரா ஆர்ச்சர் வெளுத்துக் கட்டினார். 36 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 38 ரன்கள் எடுத்து இன்று காலை டாக்கெட் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 138 நாட் அவுட், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 334 ரன்கள்.
ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது.