ஜோ ரூட் மற்றும் ராபின் உத்தப்பா
பாக்சிங் டே டெஸ்ட் என்று பிரபலமாக அழைக்கப்படும் மெல்போர்ன் டெஸ்ட் அதிர்ச்சிகரமாக 2 நாட்களில் முடிவடைந்ததையடுத்து அத்தகைய வேகம், எழுச்சி, ஸ்விங் பந்துகளுக்கு சாதக ஆடுகளங்களில் செடேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே போல் ஆட வேண்டுமென்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் பிட்ச் பிரச்சினை என்றால் பேட்டர்களின் ரியாக்ஷன் ஒரு அதிர்ச்சி என்று இயன் சாப்பல் பத்தி ஒன்றில் குறிப்பிட்டதையடுத்து இப்போது ராபின் உத்தப்பாவும் மெல்போர்ன் பிட்ச் ‘பேட் செய்யவே முடியாத’ பிட்ச் அல்ல என்று கூறியுள்ளார். பேட்டர்கள் சரியான அணுகுமுறையைக் கடைபிடித்திருந்தால் நிச்சயம் ரன்கள் ஸ்கோர் செய்திருக்க முடியும் என்கிறார் உத்தப்பா.
அவர் யூடியூப் சேனலில் கூறும்போது, “இரு வேறுபட்ட சூழ்நிலையாகும் இது. பேட்டிங்கே சாத்தியமில்லை என்பது போன்ற பிட்ச் அல்ல மெல்போர்ன் பிட்ச். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமான ஆடுகளங்கள் உள்ளன, இன்று கிரிக்கெட் விளையாடும் விதம்தான் இதற்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன்.
இத்தகைய ஆடுகளங்கள் விளையாட்டுக்கு எதிரானது. ஆனால் சரியான உத்தி, சரியான அணுகும் விதம் கொண்ட மனநிலை, போராடும் குணம் இருந்தால் ஆடக்கூடியதுதான். இத்தகைய பிட்ச்களில் அதிக ரன்களை எடுக்க முடியாது, 300 ரன்கள் கூட வேண்டாம், 250 ரன்கள் வரை எடுக்க முடியும். போராட வேண்டும். புஜாரா போலவோ, அஜிங்கியா ரஹானே போலவோ உறுதியாக பேட் செய்தால் இத்தகைய மெல்போர்ன் பிட்ச் ரகங்களிலும் ரன்கள் ஸ்கோர் செய்ய முடியும்.
டெஸ்ட் கிரிக்கெட் இப்போதெல்லாம் விளையாடப்படும் விதம் மாறிவிட்டது. நான் அதை மகிழ்ச்சியுடன் பார்க்கவில்லை. ஆஷஸ் டெஸ்ட்கள் 2 நாட்களில் முடிவடைவது நல்லதல்ல. நல்ல உத்தி உள்ள பேட்டர் என்னும் ஜோ ரூட்டே மெல்போர்னில் தொலைந்து போய் விட்டார்.
அவருக்கே எப்படி ஆட வேண்டும் என்று தெரியவில்லை. அடித்து ஆடுவதா அல்லது நின்று ஆடுவதா என்பதில் அவருக்கே சந்தேகம். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.. அவர்கள் மீது எனக்கு கருணை ஏற்படுகிறது.” என்றார்.
மெல்போர்ன் பிட்ச் ‘திருப்தியில்லை’ என்று ஐசிசி தெரிவித்த அதே வேளையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆடிய கொல்கத்தா பிட்ச் ‘திருப்திகரம்’ என்று ஐசிசி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.