இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்
பர்மிங்காம்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்துள்ளார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் ஏற்கெனவே முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியை தழுவியது பாகிஸ்தான் அணி. இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் கடந்த 9-ம் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கியது.
இதில் முதல் இன்னிங்ஸில் 133 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி. இங்கிலாந்து அணி, அதன் முதல் இன்னிங்ஸில் 453 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 449 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இன்னிங்ஸ் தோல்வியை பாகிஸ்தான் தவிர்த்தது. 320 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை பாகிஸ்தான் தொடங்கி இருந்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் தங்கள் ஆட்டத்தின் மூலம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது.
130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணி இந்த ஆட்டத்தில் விரட்டியது. 24.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
சச்சினின் சாதனையை தகர்த்த ஜோ ரூட்
பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்றாவது ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், 69 பந்துகளில் 62 ரன்கள் குவித்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதம் விளாசிய வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் ரூட். 68 அரை சதங்களுடன் சச்சின் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில், எட்ஜ்பாஸ்டனில் ரூட்டின் அரைசதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 69-வது அரைசதமாக அமைந்தது. இதன் மூலம் சச்சினின் சாதனையை அவர் தகர்த்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதம் விளாசிய வீரர்கள்
>> ஜோ ரூட் - 69 அரைசதம்
>> சச்சின் டெண்டுல்கர் - 68 அரைசதம்
>> ஷிவ்நரைன் சந்தர்பால் - 66 அரைசதம்
>> ஆலன் பார்டர் - 63 அரைசதம்
>> ராகுல் திராவிட் - 63 அரைசதம்
>> ரிக்கி பாண்டிங் - 62 அரைசதம்