கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் 26 வயதாகும் ராஜா முத்துப்பாண்டி. இந்திய ரயில்வே ஊழியரான ராஜா, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 12-ல் பிறந்தார்.
சிறு வயதிலேயே பளுதூக்கும் விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தால், முறையான பயிற்சிகளை மேற்கொண்டு ஜூனியர் பிரிவுகளில் பல்வேறு சாதனைகளை படைத்தார். 2017-ம் ஆண்டு காமன்வெல்த் இளையோர், ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.
இவரது அபாரத் திறமையால், 2018-ல் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் காமன்வெல்த் தொடரிலேயே 62 கிலோ பிரிவில் பங்கேற்ற ராஜா 6-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
எனினும் கடின பயிற்சிகளின் வாயிலாக 2019-ல் தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்று தனது தரத்தை உயர்த்திக் கொண்டதுடன் இந்திய பளுதூக்கும் உலகின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமாக உருவெடுத்தார். வெற்றிகளை நோக்கிச் சக்கரத்தைக் சுழற்றத் தொடங்கிய வேளையில், 2019 காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியின் போது ராஜாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. ‘ஸ்னாட்ச்’ பிரிவில் எடையைத் தூக்கும் போது, அவரது வலது முழங்கையில் தசைநார் கிழிவு ஏற்பட்டது.
காயத்துக்கு ராஜா, உடனடியாக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனால், எதிர்பாராதவிதமாக உலகையே முடக்கிய கோவிட் பெருந்தொற்று, அவரது மறுவாழ்வுப் பயிற்சியை வெகுவாகத் தாமதப்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலம் மோடி நகர் தேசிய பயிற்சி முகாமில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போதிலும், மனம் தளராமல் சொந்த செலவில் தனிப்பட்ட முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் களத்துக்கு திரும்பினார்.
2022-ம் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற போதிலும், துரதிர்ஷ்டவசமாக அந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணி தேர்வில் நூலிழையில் வாய்ப்பை இழந்தார். சோதனைகள் இத்துடன் முடியவில்லை, இதே ஆண்டில் ராஜாவுக்குக் கடுமையான மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதில் இருந்து அவர், குணமடைந்து வெளியே வருவதற்குள் குடல் வாலழற்சி ஏற்பட்டு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சையை எதிர்கொண்டார்.
தொடர்ந்து 10 மாதங்கள் பயிற்சியே செய்ய முடியாமல் படுக்கையில் முடங்கிய சூழலில், ‘இனி பளுதூக்குவது சாத்தியமா விளையாட்டை விட்டு விலகிவிடலாமா‘? என்று தீவிரமாக யோசிக்கும் அளவுக்கு மன வேதனை அடைந்தார் ராஜா. ஆனால், மனம் தளராமல் உடல்நலம் தேறியதும் இரட்டிப்பு வேகத்துடன் பயிற்சிகளைத் தொடங்கினார்.
இதன் பலனாக 2025-ம் ஆண்டு அகமதாபாத் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 296 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே ஆண்டு நார்வேயில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில், தனது வாழ்நாளின் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி 299 கிலோ (ஸ்னாட்ச் 130 கிலோ + கிளீன் அன்ட் ஜெர்க் 169 கிலோ) தூக்கி ஒட்டுமொத்தமாக 9-வது இடத்தையும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் உலக அளவில் 5-வது இடத்தையும் பிடித்து அசத்தினார்.
கடந்த பிப்ரவரி மாதம் மோடிநகரில் நடைபெற்ற 20-வது சீனியர் தேசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் ராஜா. இந்த தொடரில் 65 கிலோ பிரிவில் பங்கேற்ற ராஜா, ஒட்டுமொத்தமாக 302 கிலோ (ஸ்னாட்ச் 130 கிலோ + கிளீன் அன்ட் ஜெர்க் 172 கிலோ) எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனை படைத்துத் தங்கம் வென்றிருந்தார்.
கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் பதக்கம் வெல்ல முடியாமல் திரும்பிய ராஜா அதே மேடையில் தற்போது வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டை பெருமைப்படுத்தி உள்ளார். ராஜாவின் அடுத்த இலக்கு வரும் செப்டம்பரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியிலும் அதைத் தொடர்ந்து 2028-ல் நடைபெறும் லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிலும் எப்படியாவது பதக்க மேடையை அலங்கரித்துவிட வேண்டும் என்பதுதான்.