டல்லாஸ்: 23-வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள ஏடி&டி மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ‘எஃப்’ பிரிவில் உள்ள நெதர்லாந்து - ஜப்பான் அணிகள் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பில் கோல் அடிக்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.
2-வது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் 51-வது நிமிடத்தில் வலதுபுற பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து நெதர்லாந்தின் ரயான் கிராவன்பெர்க் கொடுத்த துல்லியமான கிராஸை பெற்ற வர்ஜில் வான் டைக் அதை தலையால் முட்ட பந்து கோல்கம்பத்தில் பட்டு வலைக்குள் சென்றது. இதனால் நெதர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆனால் அடுத்த 6-வது நிமிடத்தில் ஜப்பான் பதிலடிகொடுத்தது. 57-வது நிமிடத்தில் தாகெஃபுசா குபோ கொடுத்த அருமையான பாஸைப் பெற்ற கெய்டோ நகமுரா, நெதர்லாந்தின் பெனால்டி பாக்ஸின் விளிம்பிலிருந்து அடித்த ஷாட் கோல் வலையை துளைத்தது. இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.
64-வது நிமிடத்தில் ரயான் கிராவன்பெர்க் உதவியுடன் பந்தை பெற்ற நெதர்லாந்தின் கிரிசென்சியோ சம்மர்வில், பெனால்டி பாக்ஸின் வலது பக்கத்திலிருந்து அடித்த அந்த ஷாட் கோலாக மாறியது. இதனால் நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆட்டம் முடிவடைய ஒரு நிமிடமே இருந்த நிலையில் ஜப்பான் அணியின் ஜூன்யா இதோ கார்னர் கிக் மூலம் பாக்ஸ் பகுதிக்குள் பந்தை உதைத்தார். அப்போது நெதர்லாந்து அணியின் டிபென்டர்களுக்கு ஊடாக துள்ளியவாறு ஒகாவா தலையால் பந்தை முட்ட அது மற்றொரு ஜப்பான் வீரர் டைச்சி கமடாவின் தலையில் பட்டு நெதர்லாந்து அணியின் கோல் கீப்பர் வெர்ப்ரூஜெனைத் தாண்டி கோல் வலைக்குள் பறந்தது. இதனால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.
எஞ்சிய ஒரு நிமிடத்திலும், காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 7 நிமிடங்களிலும் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
நெதர்லாந்து அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 20-ம் தேதி சுவீடனுடன் மோதுகிறது. அதேவேளையில் ஜப்பான் அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 21-ம் தேதி துனீசியாவை எதிர்கொள்கிறது.
அதிக வயதில் கோல்
உலகக் கோப்பை தொடரில் ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்தின் வான் டைக் கோல் அடித்தார். இதன் மூலம் நெதர்லாந்து அணிக்காக அதிக வயதில் கோல் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார் வான் டைக் (34 வயது, 341 நாட்கள்). இதற்கு முன்னர் கடந்த 2010-ல் உருகுவேக்கு எதிரான போட்டியில் ஜியோவானி வான் பிரான்கோர்ஸ்ட் (35 வயது 151 நாட்கள்) கோல் அடித்திருந்தார்.