ஹூப்ளி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கர்நாடகா - ஜம்மு & காஷ்மீர் அணிகள் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று பேட் செய்த ஜம்மு & காஷ்மீர் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 87 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 173.1 ஓவர்களில் 584 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஷுபம் பண்டிர் 121, அப்துல் சமத் 61 ரன்களில் ஆட்டமிழந்தனர். கர்நாடகா அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து பேட் செய்த கர்நாடகா அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 69 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 130, கிருத்திக் கிருஷ்ணா 27 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்திய, ஆஸி. அணிகள் இன்று மோதல்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பிரிஸ்பனில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் அந்த அணி ஒருநாள் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஆட்டம் இன்று ஹோபர்ட்டில் உள்ள பெல்லெரிவ் ஓவல் மைதானத்தில் காலை 9.20 மணிக்கு நடைபெறுகிறது.
முதல் சுற்றை டிரா செய்தார் குகேஷ்
செக் குடியரசின் பிராக் நகரில் பிராக் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் ஹான்ஸ் மோக் நீமனுடன் மோதினார்.
62-வது நகர்த்தலின் போது இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. நடப்பு சாம்பியான இந்தியாவின் அர்விந்த் சிதம்பரம் தனது முதல் சுற்றில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக்கிடம் தோல்வி அடைந்தார்.