விளையாட்டு

ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்தது ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி!

வேட்டையன்

ஹூப்ளி: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி. இதற்கு முன்பு மூன்று முறை காலிறுதி வரை அந்த அணி முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

அதுவும் நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் எட்டு முறை பட்டம் வென்ற கர்நாடகா அணியை இறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணி எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஹூப்ளியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 584 ரன்கள் சேர்த்தது ஜம்மு காஷ்மீர் அணி. தொடர்ந்து விளையாடிய கர்நாடகா 293 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் சேர்த்தது ஜம்மு காஷ்மீர்.

          

முதல் இன்னிங்ஸில் பெற்ற 291 ரன்கள் முன்னிலை காரணமாக ஜம்மு காஷ்மீர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றி இந்தியா முழுவதும் தொழில்முறை கிரிக்கெட் வளர்ச்சியை சுட்டும் வகையில் அமைந்துள்ளது. இதுவரை 19 அணிகள் இந்த கோப்பையை வென்றுள்ளன. விதர்பா, மத்திய பிரதேச அணியின் வரிசையில் இப்போது ஜம்மு காஷ்மீரும் இணைந்துள்ளது.

இறுதி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஜம்மு காஷ்மீரின் ஷுபம் பண்டிர் 121 ரன்கள் சேர்த்திருந்தார். அவர் ஆட்ட நாயகன் விருதை வென்றவர். இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய அகிப் நபி, தொடர் நாயகன் விருதை வென்றார். அவர் மொத்தம் 60 விக்கெட்டுகளை இந்த சீசனில் கைப்பற்றி இருந்தார்.

SCROLL FOR NEXT