காலே டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் ஆட்டத்தில் நிகழ்ந்த சுவையான மற்றும் நட்பு ரீதியான கிண்டல் உரையாடல் ஒன்று வைரலாகியுள்ளது.
அதாவது, இலங்கை வீரர் நிரோஷன் திக்வெல்லா முதல் இன்னிங்ஸில் அற்புதமான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி இலங்கையை சரிவிலிருந்து மீட்டார். இல்லையெனில் ஃபாலோ ஆன் ஆகியிருக்கும், இதனையடுத்து 2-வது இன்னிங்ஸில் இவர் நின்று விட்டால் வெற்றிக்கனி இந்திய அணியின் கைகளிலிருந்து பறிக்கப்படக்கூடும், மேலும் பெரிய மழை ஒன்று காத்திருந்ததால் விரைவில் ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் இந்திய அணிக்கு இருந்தது.
இந்நிலையில், திக்வெல்லா ஆடும்போது ஜெய்ஸ்வால் அவரை நட்புக் கேலியுடன் தொடர்ந்து சீண்டிக் கொண்டிருந்தார். அப்போதுதான் 17 பந்துகளில் 12 ரன்களில் திக்வெல்லா ஆட்டமிழக்க நேரிட்டது. இவர் ஆட்டமிழந்தவுடன் 165 ரன்களுக்கு இலங்கை சுருண்டு பெரிய தோல்வியைச் சந்தித்தது. மானவ் சுதர் எனும் அற்புத மரபு ஸ்பின்னர் டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆனால், ஜெய்ஸ்வாலின் கேலியில் வன்மம் இல்லை. பிரசித் கிருஷ்ணா அவருக்கு ஷார்ட் பால் ஆக வீசிக்கொண்டிருந்தார், ஜெய்ஸ்வால் திக்வெல்லாவிடம் போய் “ஏன் ஹூக் ஷாட் ஆடலாமே?” என்றார்.
அதே ஓவரின் நடுவில் ஜெய்ஸ்வால் மீண்டும் திக்வெல்லாவிடம் சென்று முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் எடுத்த போது ஏன் அத்தனை ஸ்லோவாக ஆடினீர்கள் என்ற தொனியில் முதல் இன்னிங்ஸில் போட்டு அறுத்துட்ட, இப்பவாவது ஷாட் ஆடு என்ற ரீதியில் கலாய்த்துள்ளார். இதற்கு திக்வெல்லாவும் “ஓகே” என்றார்.
இதோடு விடாமல் ஜெய்ஸ்வால் மீண்டும் அவரிடம் போய் காலே முனிசிப்பாலிட்டி ஸ்டாண்டைக் காட்டி ‘அங்க அடி’, ‘நான் கொஞ்சமாவது ஷாட் ஆடிப் பார்க்கணும்’ என்று சீண்டினார்.
இதற்கு திக்வெல்லா, ‘அப்படி ஆட நான் ஜெய்ஸ்வால் அல்ல’ என்றார் அதோடு, ஜெய்ஸ்வாலை நோக்கி, ‘என்னை ஐபிஎல்-க்குக் கொண்டு செல் அப்போது இந்த ஷாட்களை ஆடுகிறேன்’ என்று கூற, ஜெய்ஸ்வால் “100% உன்னை அழைத்துச் செல்கிறேன்” என்றார்.
பிரசித் கிருஷ்ணா பந்தை ஸ்டாண்டிற்கு அடித்தால் சங்கக்காராதான் ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமைப் பயிற்சியாளர், அவரிடம் நிச்சயம் உன்னை எடுக்கச் சொல்வேன் என்றார் ஜெய்ஸ்வால்.
இந்த நட்புக் கேலி உரையாடல் திக்வெல்லாவின் கவனத்தைச் சிதறடித்து, அவர் ஆட்டமிழக்க உதவியாக இருந்ததாக இந்திய அணி வீரர்கள் குறிப்பாக ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், படிக்கல் போன்றோர் உணர்ந்ததாகக் கூறப்படுகிறது.